விதை நேர்த்தி உரச்செலவை குறைக்கும் வேளாண் அதிகாரி சொல்றதை கேளுங்க...!!!

 

-MMH

திருப்பூர்;வேளாண் துறையினர் கூறியதாவது:பயிர்களை, விதை மூலம் பரவக்கூடிய, பூஞ்சாண நோய்களில் இருந்து பாதுகாப்பதற்கு, விதையுடன் பூஞ்சாண மருந்து கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். விதை மூலம் பரவும் இலைப்புள்ளி, இலை கருகல், இலை உறை அழுகல், குலை நோய் போன்ற பூஞ்சாண நோய்களை தடுக்க, ஒரு கிலோ விதைக்கு, இரண்டு கிராம் வீதம், கார்பன்டைசிம் கலந்து 24 மணி நேரம் வைத்திருந்து, பின் விதைக்க வேண்டும்.நெல், சிறுதானியம், பருத்தி, கரும்பு, எள், சூரியகாந்தி பயிர்களுக்கு, விதை நேர்த்தி செய்வதற்கு, ஒரு ஏக்கர் விதைக்கு அசோஸ்பைரில்லம் ஒரு பாக்கெட் ஆறிய வடிகஞ்சியில் கலந்து, அத்துடன் பூஞ்சாண விதை நேர்த்தி செய்த விதையை கலந்து நிழலில், 30 நிமிடம் உலர்த்தி பின் விதைக்க வேண்டும்.

நிலக்கடலை மற்றும் பயறு வகைகளுக்கு, விதை நேர்த்தி செய்வதற்கு ஒரு ஏக்கர் விதைக்கு, 'ரைசோபியம்கல்சர்' ஒரு பாக்கெட்டை, ஆறிய வடிகஞ்சியில் கலந்து, அத்துடன் பூஞ்சாண விதை நேர்த்தி செய்த விதையை கலந்து, நிழலில், 30 நிமிடம் உலர்த்தி, பின் விதைக்க வேண்டும்.உயிர் உர விதை நேர்த்தி செய்வதால், உயிர் உரங்கள் காற்றிலுள்ள தழைச்சத்தை கிரகித்து, பயிருக்கு கொடுக்கும். இதனால், இளம் பயிரின் இலைகள், கரும்பச்சை நிறத்துடன் செழிப்பாக வளரும். பயிர்கள் கூடுதல் மகசூல் கொடுக்கும். இதன் மூலம், கால் பங்கு, தழைச்சத்து இடுவதை குறைக்கலாம்; அதன் மூலம், உரச்செலவு குறையும். எனவே, விவசாயிகள் பூஞ்சாணக் கொல்லி விதை நேர்த்தி செய்து, பயிர்களை நோய்களில் இருந்து வருமுன் காக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

நாளையவரலாறு செய்திக்காக,

-ஹ.மு. முஹம்மதுஹனீப் திருப்பூர்.

Comments