பி.ஏ.பி., விவசாயிகள் குற்றச்சாட்டு :கலெக்டர் ஆபீசில் திரண்டு புகார்!!

  -MMH

     திருப்பூர்:-கடைமடை பகுதிக்கு, சரியான அளவு தண்ணீர் வழங்க வேண்டுமென, வெள்ளகோவில் பி.ஏ.பி., விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் திரண்டனர்.பி.ஏ.பி., பாசன திட்டத்தில், நீர் பங்கீட்டு விகிதாசாரப்படி, வெள்ளகோவில் வட்டாரத்துக்கு மட்டும், 240.73 மில்லியன் கன அடி சென்று சேர வேண்டும்.

இதுவரை, 126.49 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது; 114.24 மில்லியன் கன அடி தண்ணீர் கிடைப்பதே இல்லை.ஒவ்வொரு சுற்றுக்கு தண்ணீர் திறக்கும் போதும், ஏழு நாள் தண்ணீர் திறப்பு; ஏழு நாள் நிறுத்தம் என்ற வகையில், 28 நாட்கள் தண்ணீர் திறக்கப்பட வேண்டும். மாறாக, நான்கு நாட்கள் மட்டுமே தற்போது தண்ணீர் திறக்கப்படுகிறது.விதிமுறைகளை பின்பற்றி, தண்ணீர் திறந்தால் மட்டுமே கடைமடை பகுதிக்கு தண்ணீர் கிடைக்கும். அணையில் இருந்து தண்ணீர் முழு அளவில் திறக்கப்பட்டாலும், கடைமடைக்கு வந்துசேராத தண்ணீர், எங்கே செல்கிறது என, விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

வெள்ளகோவில் பி.ஏ.பி., பாசன விவசாயிகள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் இதன்மூலம் கருத்துவேறுபாடு நிலவுகிறது. அதிகாரிகள், நீர் பங்கீடு மற்றும் திறப்பு அளவுகளை வழங்க மறுப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். வெள்ளகோவில் பகுதி விவசாயிகள், 200க்கும் மேற்பட்டவர்கள், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் திரண்டனர். பிரதிநிதிகள் மட்டும் கலெக்டர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து இப்பிரச்னை குறித்து முறையிட்டனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:பி.ஏ.பி., திட்டத்தில், அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் எங்கே செல்கிறது என்று அதிகாரிகளால் கூற இயலவில்லை. அந்த அளவுக்கு, இடையே தண்ணீர் திருட்டு நடக்கிறது. எங்களுக்கு சேர வேண்டிய தண்ணீரில், 50 சதவீதத்தை மட்டும் பெறுகிறோம். வெள்ளகோவில் பி.ஏ.பி., கடைமடைப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையை பரிசீலித்து, இந்தாண்டில் இருந்தே சரியான அளவு தண்ணீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

நாளையவரலாறு செய்திக்காக,

-ஹ.மு.முஹம்மதுஹனீப், திருப்பூர்.

Comments