உடுமலை நகரிலுள்ள குடியிருப்புகளில் அதிகரிக்கும் குற்றங்கள்!!

-MMH           சக்திவேல் 


     உடுமலை; உடுமலையில் அடுத்தடுத்து கொள்ளை, திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் நடப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உடுமலை நகரில் சமீபகாலமாக திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.


நேற்றுமுன்தினம் இரவு எஸ்.என்.ஆர்.,லே-அவுட் பகுதியில், அடுத்தடுத்த வீடுகளில், கொள்ளை மற்றும் திருட்டு சம்பவம் நடந்துள்ளது. 3வது வீதியை சேர்ந்த சக்திவேல் (50), வீட்டில், நள்ளிரவு 12:30 மணியளவில் கேட்டை கழற்றி விட்டு முன் பக்க கதவை உடைத்து திருடர்கள் உள்ளே புகுந்துள்ளனர். படுக்கை அறைக்குள் புகுந்து துணி, பொருட்களை அகற்றி, நகை, பணம் தேடியுள்ளனர்.


பீரோவை உடைக்க முயற்சித்த போது சத்தம்கேட்டு சக்திவேல் எழுந்த போது அவரை இரும்பு ராடு கொண்டு தலையில் தாக்கியதோடு, கத்தியால் மார்பு பகுதியை தாக்கி விட்டு தப்பி ஓடினர். சக்திவேல் கூறுகையில், ''இருவருக்கும், 35 முதல் 40 வயது இருக்கும். சட்டை அணியவில்லை லுங்கி மட்டும் கட்டியிருந்ததோடு, பிடிக்க முடியாத அளவிற்கு உடம்பு முழுவதும் எண்ணெய் தடவியிருந்தனர்,'' என்றார்.


அதே போல், ஒரு சில வீடுகள் தள்ளி இருந்த தனியார் பள்ளி ஆசிரியர் மணிமாறன் சொந்த ஊருக்குச்சென்றிருந்தார். அந்த வீட்டுக்கதவை உடைத்து உள்ளிருந்த 5 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச்சென்றனர். அதே போல், குடியிருப்பு பகுதியில் பல வீடுகளின் கதவை தட்டியுள்ளனர். உள்ளிருந்து சத்தம் வந்தால் ஆயுதங்களை காட்டி மிரட்டியுள்ளனர். இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதியில் கொள்ளையர்கள் அட்டகாசம் காரணமாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.


உடுமலையில் உரக்கடை அதிபர் வீடு, மின் வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற செயற்பொறியாளர் வீட்டில், கட்டி போட்டு, கோடிக்கணக்கான ரூபாய் மற்றும் நகை கொள்ளையடிக்கப்பட்டது. நான்கு மாதமாகியும் குற்றவாளிகளை போலீசார் கைது செய்யவில்லை. அதே போல், கடந்த சில நாட்களில், தொடர்ந்து திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் நடந்து வருகின்றன.


செல்வபுரம் பகுதியை சேர்ந்த பள்ளி ஆசிரியை மகாலட்சுமி வீட்டிற்குள் புகுந்து, 9 பவுன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டது. அனுஷம் தியேட்டர் பகுதியில், ஆடிட்டர் சிவப்பிரகாஷம் காரில் இருந்த 1.5 லட்சம் ரூபாய் திருடப்பட்டது. இவ்வாறு உடுமலை பகுதிகளில் தொடர்ந்து, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், குற்றச்செயல்களை தடுப்பது மற்றும் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றனர். பெரும்பாலான குற்றச்சம்பவங்களுக்கு வழக்கு பதிவு செய்யாமலும், புகார் மனு கூட பெறுவதில்லை.தீபாவளி திருநாள் நெருங்கும் நிலையில் திருட்டு சம்பவங்களை குறைக்க போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும். குற்றச்சம்பவங்கள் குறித்து முறையாக வழக்கு பதிவு செய்யவும், குற்றவாளிகளை பிடிக்கவும், எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.


நாளையவரலாறு செய்திக்காக, 


-முஹம்மதுஹனீப், திருப்பூர்.


Comments