16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 600 பேர்..! ஆட்டோ டிரைவர், தரகர் என 12 பேர் கைது!

 

-MMH

மதுரையில் 16 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. சிறுமியை இதுவரை 600க்கும் மேற்பட்டோரிடம் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண் முகவர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மதுரை கோரிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பெற்றோரை இழந்த சிறுமியை, கடந்த 2015ஆம் ஆண்டு ஜெயலட்சுமி என்ற பாலியல் தொழிலாளி உறவினர் என்ற அடிப்படையில் அழைத்துச் சென்று வளர்த்து வந்துள்ளார்.  

அப்போது அந்தச் சிறுமிக்கு வயது 10. அந்தச் சிறுமி 13வயதில் பூப்படைந்த நிலையில், தன்னை நம்பி வந்த சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார் ஜெயலட்சுமி. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ஜெயலட்சுமி தன்னுடனிருக்கும் பாலியல் பெண் முகவர்களான அனார்கலி என்ற அனாரம்மாள், சுமதி, ஐஸ் சந்திரா என்ற சோரி சந்திரா, தங்கம் ஆகியோர்

சின்னத்தம்பி உதவியுடன் மதுரை மட்டுமின்றி பல்வேறு மாவட்ட, மாநிலங்களைச் சேர்ந்த நபர்களுடன் சிறுமியை அனுப்பி வைத்துள்ளார். இந்தச் சூழலில் மதுரை மாவட்டத்தில் பாலியல் தொழிலில் முக்கிய புள்ளியாகத் தேடப்பட்டுவந்த சிறுமியின் உறவினர் ஜெயலட்சுமி உள்ளிட்ட 5 பெண் முகவர்களையும் ஆட்கடத்தல் விபச்சார தடுப்பு காவல்துறையினர் பின்தொடர்ந்து கைது செய்ய முயன்றபோது பல முறை தப்பிச் சென்றுள்ளனர்.

இதற்கிடையே, மதுரை உத்தங்குடி அருகேயுள்ள விஐபி நகர்ப் பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாகவும், அழைத்துச் சென்று துன்புறுத்துவதாகவும் ஆட்கடத்தல் விபச்சாரத் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் ஆய்வாளர் ஹேமமாலா தலைமையிலான தனிப்படை ஒன்று, குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று சிறுமியை மீட்டனர். அப்போது அங்கிருந்த சரவண பிரபு என்பவரை மட்டும் கைதுசெய்தனர்.

சிறுமியிடம் நடத்திய விசாரணையில் கிடைத்தத் தகவலின்பேரில், அவரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய ஜெயலட்சுமி, சுமதி, ஐஸ் சந்திரா என்ற சோரி சந்திரா உள்பட ஐந்து பெண் தரகர்களைத் தேடிவந்த நிலையில், டிச. 23 அன்று காலை அவர்களைத் தனிப்படையினர் கைதுசெய்தனர்.

பாதிக்கப்பட்ட சிறுமியிடம் நடத்தப்பட்ட விரிவான விசாரணையில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் தனிப்படை காவல்துறையினருக்கு கிடைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

விசாரணையில், 11 வயதிலிருந்து சிறுமியை பெண் உறவினர் உள்ளிட்ட ஐந்து பேரும் 600-க்கும் மேற்பட்ட நபர்களிடம் பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்தியதும், பணம் அதிகளவு பெற்றுக்கொண்டு, சிறுமிக்கு பண ஆசை காட்டி ஏமாற்றிவந்ததும் தெரியவந்தது.

மாவட்டம் முழுவதிலும் அதிக பணத்துக்கு சிறுமியை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திவந்ததும் தெரியவந்தது. ஓட்டுநர்கள், தொழிலாளர்கள், பல்வேறு மாநிலத்தவர்கள், தொழிலதிபர்கள் என பல தரப்பினரிடம் சிறுமியை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். கைதான ஆறு பேருக்கு உதவியாக இருந்த ஆட்டோ ஓட்டுநர் சின்னதம்பி தலைமறைவாகியுள்ளார்.

இந்த நிலையில், போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த தனிப்படை காவல் துறையினர் ஆறு பேரையும் நீதிமன்றத்தில் நேர் நிறுத்தி, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டதில், பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐந்து ஆண்டுகளாகச் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதால், 70 வயதான மூதாட்டி போன்று உடலில் சிறுமிக்கு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக, மருத்துவர்கள் நடத்திய பரிசோதனையில் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.

முக்கியப் புள்ளிகளாகத் தேடப்பட்டுவந்த தரகர்கள் தற்போது கைதான நிலையில், பலவந்தப்படுத்தி சிறுமியைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திவந்தது தமிழ்நாட்டில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சிறுமி என்று பாராமல் அவருடன் வலுக்கட்டாயமாக பாலியலில் ஈடுபட்ட சுமார் 600 பேர் யார், அவர்கள் பின்னணி என்ன என்ற விவரங்களைச் சேகரிக்கும் பணியில் தனிப்படை காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். அவர்களைக் கண்டறிந்து கைதுசெய்யும் முயற்சியை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

-பாரூக், சிவகங்கை.

Comments