2020இல் மக்களை அதிகம் வாட்டியது கொரோனாவா..! - மோடியா ?

-MMH

2020ஆம் ஆண்டு பொதுமக்களுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்திய ஆண்டாக எதிர்பாராவிதமாக அமைந்து விட்ட போதும், அரசு இயந்திரம் சரியாக செயல்பட்டதா இல்லையா என்பது குறித்துப் பார்க்கலாம்.

தொடக்கமே போராட்டம்: குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் அதனை ஆளும் பாஜக அரசு சட்டமாக்கியது. எனினும், இஸ்லாமியர்கள் தவிர்த்துப் பிற மதத்தினருக்கு மட்டும் ஆதரவாக இருப்பது, பூர்வீக குடிமக்கள் தங்களது பெரும்பான்மைக்கும், பாரம்பரியத்துக்கும் ஆபத்து வந்துவிடும் என அஞ்சுவது, இலங்கையில் இருந்து தமிழகத்தில் குடியேறிய அகதிகளை இடம்பெறாதது என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் டெல்லியில் மாணவர்கள், பொதுமக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர். அதுதவிர நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. ஆனால், போராட்டக்காரர்களை காவல்துறையினர் இரும்புக் கரங்கள் கொண்டு அடக்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. குடியுரிமை சட்டம் தொடர்பான சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டோர் மீது வழக்கு பாய்ந்தது.

டெல்லியில் மதக்கலவரம்: குறிப்பாக, டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தையடுத்து, பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்த போலீசார் மாணவர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தினர். இந்த விவகாரம் கடும் கண்டனத்துக்கு உள்ளாகியது. அதன் தொடர்ச்சியாக, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இடதுசாரி, தலித் மாணவ அமைப்புகளுக்கும், பாஜக மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் இடையே நடைபெற்ற தாக்குதல், டெல்லியின் வடகிழக்கு பகுதிகளில் குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் மதக்கலவரமாக வெடித்ததில் 27 பேர் உயிரிழந்த சம்பவம் என உலக நாடுகளின் கவனத்தை இந்தியா பெற்றது. இந்த விவகாரங்களில் சர்வதேச ஊடக நிறுவனங்கள் மோடி அரசை கடுமையாக விமர்சித்தன.

இந்தியாவை ஆட்டுவித்த கொரோனா: இந்த பரபரப்புகளை அடக்கும் விதமாக கொள்ளை நோயான கொரோனா இந்தியாவில் புகுந்தது. உலக நாடுகளை அச்சுறுத்திய கொரோனா ஜனவரி இறுதியில் இந்தியாவில் தலை தூக்கியது. என்னவிதமான நோய் என்று மக்களுக்கு ஏன் அரசுகளுக்கும் புரியும் முன்னரே அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் அடுத்தடுத்து காவுகளை வாங்கத் தொடங்கியது கொரோனா. இந்திய மக்கள் தொகை அடர்த்தியை ஒப்பிடும் போது கொரோனா தொற்று குறைவே என்ற வாதங்கள் அப்போது முன் வைக்கப்பட்டன. ஆனால், சோதனை அடிப்படையில் இந்தியா மற்ற நாடுகளை விட குறைவான பரிசோதனைகளை மேற்கொள்வதால் தொற்றுகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என உலக நாடுகள் குற்றம் சாட்டின. அதனை மெய்ப்பிக்கும் வகையில் சோதனைகள் இந்தியாவில் தீவிரப்படுத்தப்பட்ட போது, தொற்றுகளின் எண்ணிக்கையில் உலக நாடுகளை முந்திச் சென்று பட்டியலில் முன்னிலை வகித்தது இந்தியா.

கொரோனாவில் புகுந்த மத அரசியல்: இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் தொற்றுகளுக்கு டெல்லியில் நடைபெற்ற தப்லிக் ஜமாத் கூட்டமும், அதில் பங்கேற்றவர்களிடம் இருந்தே தொற்று பரவியது என்ற குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன. ஜனவரியில் கொரோனா தொற்று இந்தியாவில் பதிவான உடனேயே இந்த மாநாட்டை நிறுத்தி இருக்க வேண்டும். அப்படி செய்யாமல் மாநாட்ட நடத்திய தவறுதான். அல்லது இவ்வளவு பெரிய மாநாட்டை அரசாவது ரத்து செய்திருக்க வேண்டும். ஆனால், அரசுக்குமே அப்போது கொரோனா குறித்த விழிப்புணர்வு இல்லை.

எனினும், ட்ரம்ப் குஜராத் மாநாடு, ராமர் சிலை கொண்டு செல்லப்பட்ட நிகழ்வு என இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு பிந்தைய மாநாடுகள் நிகழ்ச்சிகள் என அனைத்தையும் கண்டுகொள்ளாமல் தப்லிக் ஜமாத் மாநாட்டை மட்டும் காரணம் காட்டி இஸ்லாமியர்கள் மீது திட்டமிட்ட வன்மம் பரப்பப்பட்டது. 

இத்தாலியில் கிறிஸ்தவ தேவாலயங்களின் வாயிலாகப் பரவியதால் தேவாலயங்கள் மூடப்பட்டன. ஆயினும் கிறிஸ்தவர்களால் பரவியது என்று யாரும் சொல்லவில்லை. ஆனால் இந்தியாவில் மட்டும் இஸ்லாமியர்களால்தான் பரவியது என்பது போன்ற மோசமான பிம்பங்கள் கட்டமைக்கப்பட்டன.

கைதட்டி, விளக்கேற்றிய இந்தியாவும் - பிரதமர் மோடியும்: கொரோனா காலகட்டத்தில் சுமார் 5க்கும் மேற்பட்ட முறை நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி பேசியுள்ளார். இவை அனைத்தும் அவர் ஹிந்தியிலேயே பேசினார். தமிழ் புலவர் திருவள்ளுவரது திருக்குறளை மேற்கோள் காட்டி பெரும்பாலும் பேசி வரும் பிரதமர் நாட்டு மக்கள் அனைவருக்கும் ஹிந்தி தெரியும் என்று நினைத்து விட்டார் போல். இதுஒருபுறமிருக்க, உலக நாடுகள் கொரோனாவுக்கான பரிசோதனை அதிகரித்துக் கொண்டிருந்த வேளையில், நாட்டு மக்களை கைதட்டி ஒலி எழுப்ப வேண்டும் என்றும், விளக்கேற்ற வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். இவ்வாறு செய்தால் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்கான உளவியல் ரீதியான அனுகுமுறை என்று கூறப்பட்டது.

ஆனால், அதுபோன்ற நிகழ்வுகள் பொதுமக்களுக்கு குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு கொரோனா குறித்த அச்சத்தை எவ்விதத்திலும் போக்கி விடவில்லை என்பதே தற்போது வரை நிதர்சனமாக உள்ளது. மேலும், பொதுமக்களிடையே தனக்கு எவ்வளவு செல்வாக்கு அல்லது ஆதரவு உள்ளதை என்பதை தெரிந்து கொள்ளும் விதமாகவே மோடி இவ்வாறு கேட்டுக் கொண்டார் என்ற விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.

வேலையிழப்பை வேடிக்கை பார்த்த அரசு: இந்தியாவை பொறுத்தமட்டில் திடீரென அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தால் பல கோடி மக்கள் வார்த்தைகளால் விவரிக்க முடியாத இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, வேலையின்மை அதிகரித்து வருகிறது. பொருளாதாரம் முடக்கப்பட்டதால் பல கோடி மக்கள் வேலையின்றி தவிக்கும் நிலை ஒருபுறம் இருக்க, ஊதிய பிடித்தமும் ஆட்குறைப்பும் பெரு நிறுவனங்களால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா காரணமாக தற்போது வீட்டிலிருந்தே பணி புரியும் ஊழியர்களை, பல தகவல் தொழிற்நுட்ப நிறுவனங்கள் கால வரையறை எதையுமே பின்பற்றாமல் பணி புரிய சொல்கிறார்கள், இதற்கு அதிக ஊதியம் கொடுக்கப்படுவதில்லை. மாறாக, 15% முதல் 50% ஊதியக் குறைப்பை செய்துள்ளன.

தனியார் நிறுவனங்கள் தனது ஊழியர்களை வேலையிலிருந்து நீக்க வேண்டாம் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்ட போதும், பணி நீக்கங்கள் தொடர் கதையாகி வருகிறது. ஊழியர்கள் தாங்களாகவே ராஜினாமா செய்ய வற்புறுத்தப்பட்டு வருகிறார்கள். நடுத்தர வர்க்கத்தில் வேலையிழந்த ஊழியர்கள் தங்களது குழந்தைகளின் கல்விக் கடன், வீட்டுக் கடன் இவற்றுக்கு எல்லாம் மாத கடன் தவணை கட்ட வழியில்லாமல் விழிபிதுங்கியுள்ளனர். இன்று பணியிலிருக்கும் பலருக்கும் வருங்காலத்தில் வேலை இருக்குமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இவற்றுக்கு தீர்வு காண அரசு இதுவரை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

ஏழைகள், தினக்கூலி வேலை செய்பவர்கள், சிறு, சிறு தொழில் செய்து பிழைப்பவர்கள் என பொதுமுடக்கத்தால் கடுமையான பாதிப்புக்குள்ளானவர்களின் பொருளாதார தேவைகளை மீட்டெடுக்க போதுமான உதவிகளை அரசு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன. கோவிட் -19 உலகளாவிய தொற்றுநோயாக இருக்கும் போதிலும், இந்தியாவின் நிலைமைகள் தனித்துவமானவை. எனவே, ஒட்டுமொத்த முடக்கத்தின் போது மற்ற நாடுகள் பின்பற்றிய உத்திகளை விடுத்து வேறு மாதிரியான உத்திகளை நாம் கையாள வேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் கோரிக்கை விடுத்தது நினைவுகூரத்தக்கது.

ஏழைகளின் பயணங்களும், பட்டினியும்: கொரோனா சமூக பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு திடீரென அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கம் பொதுமக்களிடையே பீதியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியது. விவசாயம், கட்டுமானம், தொழிற்சாலைகள் என பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருந்த புலம் பெயர் தொழிலாளார்கள் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் தங்களது வீடுகளை காலி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

பொது முடக்கம் அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டதால், அன்றாட ஊதியம், சாப்பாடு உள்ளிட்ட அடிப்படை தேவைகள் கிடைக்காமல் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும், பல்வேறு மாநிலங்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல கடுமையான நடைபயணங்களை மேற்கொண்டனர். அதில் பலர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த இடம்பெயர்தல் இந்திய வரலாற்றில் மோசமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

பிரதமர் மனதில் ஏழைகள் இல்லையா?  இதுபோன்ற இடம் பெயர்தலுக்கு ஆளாகியவர்கள் ஏழை எளிய மக்களே, மிகக் குறைந்தளவு படித்தவர்கள், மிகவும் பின்தங்கிய வகுப்பினர். கடுமையான உடலுழைப்பு வேலைகளில் ஈடுபடுத்தப்படுபவர்கள். சொந்த கிராமங்களில் இருந்து புறப்படும் போதே சுரண்டலில் இணைக்கப்பட்ட வேலைகளில் அடிமை போன்று ஈடுபடுபவர்கள். ஆனால், சுரண்டப்படும் இவர்கள்தான் இந்தியாவின் முதுகெலும்பான தொழிலாளர்கள். பிரதமர் மோடி ஊரடங்கை அறிவித்தபோது அவரது மனதில் இவர்கள் இருந்தார்களா என தெரியவில்லை.

அரசுதான் முகாம்களில் இவர்களுக்கு ஏற்பாடு செய்ததே ஆனாலும் ஏன் நடைபயணமாக செல்ல வேண்டும் என, ‘ஊரடங்கின் போது மூன்று வேளைகளும் திருப்தியாக வீட்டில் சாப்பிட்டுவிட்டு பிட்னஸுக்கு என்ன செய்யலாம்’ என யோசித்துக் கொண்டு கேள்வி கேட்பவர்களுக்கு கண்டிப்பாக இவர்களது பிரச்சினை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இத்தனை தடைகளையும் தாண்டி, கொரோனாவை போராடி வென்று வரும் இந்தியாவின் பாட்டாளி வர்க்கம் அடுத்த ஆண்டில் புதியதொரு நம்பிக்கையோடு அடியெடுத்து வைக்கவுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-பாரூக்.

Comments