கொரோனா உலகின் கடைசிப் பெருந்தொற்று அல்ல..! உலக சுகாதார அமைப்பின் தலைவர் அறிவுறுத்தல்!!

-MMH

கரோனா வைரஸ் உலகின் கடைசிப் பெருந்தொற்று அல்ல என வரலாறு நமக்குச் சொல்கிறது: உலக சுகாதார அமைப்பின் தலைவர் அறிவுறுத்தல். கரோனா வைரஸ் உலகின் கடைசிப் பெருந்தொற்று நோய் அல்ல என்று வரலாறு நமக்குச் சொல்கிறது. ஆதலால், காலநிலை மாற்றத்தையும், விலங்குகளை நலத்தையும் சரி செய்யாமல் மனித குலத்தின் நலத்தை மட்டும் மேம்படுத்துவது துரதிருஷ்டம் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ் தெரிவித்துள்ளார்.     

தொற்றுநோய்களைத் தடுக்க உலகம் தயாராக இருப்பதைக் கண்காணிக்கும், தி குளோபல் பிரிபேர்ட்னஸ் மானிட்டரிங் போர்ட், கடந்த ஆண்டு முதல் ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்தது. இந்த ஆய்வறிக்கை உலகில் கரோனா வைரஸ் பாதிப்பு உருவாவதற்கு சில மாதங்களுக்கு முன் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், “பெருந்தொற்று ஏதும் ஏற்பட்டால், அதை எதிர்கொள்வதற்கு இந்த உலகம் எந்தவிதத்திலும் தயாராக இல்லை. கவலைக்குரிய வகையில் தயாராகாமல் இருக்கிறார்கள்” எனத் தெரிவித்தது. தொற்றுநோய்க்கு எதிராகத் தயாராகும் சர்வதேச நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதையடுத்து உலக சுகாதர அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ் வீடியோ மூலம் சில செய்திகளைத் தெரிவித்துள்ளார்.

''உலகில் ஏதாவது பெருந்தொற்று நோய் ஏற்பட்டால், அதைச் சமாளிக்க குறுகியகால நோக்கில் பணத்தை வீசி எறிந்து அதைச் சமாளித்து விடுகிறோம், அந்தப் பெருந்தொற்று போனபின் அதை மறந்து விடுகிறோம். ஆனால், அடுத்து இதுபோன்று பெருந்தொற்று உருவானால் அதை எதிர்கொள்ள என்ன செய்யப்போகிறோம் என்ற சிந்தனை நமக்கு இல்லை, அதற்காக ஒன்றும் செய்வதில்லை. அது ஆபத்தான குறுகியகால நோக்கில் செய்யப்படும் செயல். இதைப் புரிந்துகொள்ள கடினமாக இருக்கிறது.

கரோனா வைரஸ் பெருந்தொற்றிலிருந்து நாம் அதிகமான பாடங்களைக் கற்க வேண்டிய நேரம். நீண்ட காலமாக, இந்த உலகம் அச்சம் மற்றும் புறந்தள்ளுதல் எனும் வட்டத்தில் மட்டுமே இயங்கி வருகிறது. இந்த கரோனா வைரஸ் பெருந்தொற்றுதான் உலகில் கடைசி வைரஸ் இல்லை என்று வரலாறு நமக்குச் சொல்லிவிட்டது. மனித குலத்தின் சுகாதாரம், விலங்குகளின் நலன், இந்த பூமியின் நலன் ஆகியவற்றுக்கு இடையே நெருங்கிய தொடர்பு இருக்கிறது, ஒன்றோடொன்று சங்கிலி போன்று பிணைப்பு கொண்டது என்று இந்த கரோனா வைரஸ் உணர்த்திவிட்டது.

விலங்குகள், மனிதர்களுக்கு இடையிலான பிரச்சினைகளைத் தீர்க்காமல், காலநிலை மாற்றத்துக்கான அச்சத்தைப் போக்கி, பூமியில் வாழும் கோளாக மாற்ற முயற்சி எடுக்காமல், மனிதர்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு, அவர்களின் சுகாதாரத்தை மட்டுமே உயர்த்த எடுக்கும் முயற்சிகள் அழிவுக்குத்தான் செல்லும்.

கடந்த 12 மாதங்களில் உலகம் தலைகீழாக மாறிவருகிறது. கரோனா வைரஸ் பாதிப்பு அந்த நோயையும் கடந்து சமூகம்,பொருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பெருந்தொற்று வந்தால் அதை எதிர்கொள்ள எவ்வாறு தயாராக வேண்டும், சுகாதாரத்தைப் பராமரிப்பது, பெருந்தொற்றுகளைக் கண்டுபிடிப்பது, தடுப்பது போன்றவற்றில் உலக நாடுகள் முதலீடு செய்ய வேண்டும். இதுபோன்று பொது சுகாதாரத்தில் உலக நாடுகள் முதலீடு செய்வதன் மூலம், நம்முடைய குழந்தைகள், அவர்களின் சந்ததியினர் பாதுகாப்பாகவும், நோய் எதிர்ப்பாற்றல் மிக்கவர்களாகவும் மாறி உலகில் வாழ முடியும்''. இவ்வாறு டெட்ராஸ் அதானம் தெரிவித்தார். கரோனா வைரஸால் உலகில் இதுவரை 17.50 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 8 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

-செந்தில் முருகன் சென்னை தெற்கு.

Comments