சமையல் எண்ணெய் சில்லறையாக விற்கத் தடை! - மதுரை உயர்நீதிமன்றக் கிளை!
சமையல் எண்ணெய் வகைகளை, பேக்கிங் செய்யாமல் சில்லறையாக (லூசில்) விற்பனை செய்ய சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள்நிதி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், சமையல் எண்ணெய்கள் சில்லறை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். காரணம், வியாபாரிகள், சமையல் எண்ணெய்களில் முந்திரி தோலில் இருந்து எடுக்கக்கூடிய பயன்படாத எண்ணெயை அனைத்து சமையல் எண்ணெய்களிலும் கலந்து விற்பனை செய்கின்றனர்.
இதனால் உடல் உறுப்புகள் பெரிதும் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக கல்லீரல், இருதயம், மூளை போன்ற உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன. மேலும் கலப்பட எண்ணெய்களால் புற்றுநோய் மற்றும் மாரடைப்பு ஏற்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. எனவே சமையல் எண்ணெய்களை சில்லறை விற்பனையில் விற்கத் தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
வழக்கின் விசாரணையின் போது நீதிபதிகள், எண்ணெய்யை பாக்கெட்டில் அடைக்காமல் விற்கக் கூடாது என்று 2011ம் ஆண்டு உணவு பாதுகாப்பு சட்டம் கூறுகிறது. சட்டப்படி தடை இருந்தும் சில்லறையில் எண்ணெயை விற்க அனுமதித்தது ஏன்? எண்ணெயில் கலப்படம் செய்வோர்கள் மீது ஏன் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கக் கூடாது? எனக் கேள்வி எழுப்பினர்.
மேலும் சமையல் எண்ணெயின் தரத்தை ஆய்வு செய்வதற்காக எத்தனை ஆய்வகங்கள் உள்ளன? கடந்த 5 ஆண்டுகளில் எவ்வளவு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன? இதில் விதிகளை மீறியதாக எத்தனை வழக்குகள் உள்ளன? என்ற விவரங்களை மாவட்ட வாரியாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், தமிழகத்தில் சமையல் எண்ணெயை சில்லறையாக விற்பனை செய்யக்கூடாது என்றும், பேக்கிங் செய்த சமையல் எண்ணெய்களையே விற்பனை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கினை ஜனவரி 18ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
-பாரூக், சிவகங்கை.
Comments