சனிப்பெயர்ச்சி விழா திருநள்ளாறில் கட்டுக்கடங்காத கூட்டம்..!

 

-MMH 

திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் இன்று சனிப்பெயர்ச்சி விழா  நடைபெற்று வருகிறது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உலகப் பிரசித்தி பெற்ற சனீஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. இங்கு 2½ ஆண்டுகளுக்கு ஒருமுறை வாக்கியப் பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5.22 மணிக்கு சனிப்பெயர்ச்சி நடைபெற்றது.  சனிபகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். மகர ராசியில் 20.12.2023- வரை வீற்றிருந்து பலன்களை வழங்க உள்ளார். சனிபெயர்ச்சி என்றாலே பலருக்கும் பயம்தான். காரணம் சனிபகவானால்  ஏதாவது கெடுதல் வந்து விடுமோ என்ற பயம்தான்.

சனிபகவான் நல்லவர்களுக்கு நல்லதே செய்வார். மகரம் ராசி சனியின் ஆட்சி வீடு. சனிப்பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கப்படி நிகழ்ந்துள்ளது. தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். இந்த ஆண்டு துவக்கத்தில் சனி பெயர்ச்சி திருக்கணிதப்படி நிகழ்ந்திருந்தாலும் சனிபகவான் கோவில்களில் வாக்கிய பஞ்சாங்க முறைதான் கடைபிடிக்கப்படுகிறது. திருநள்ளாறு, குச்சனூர், பொழிச்சலூர், திருக்கொள்ளிக்காடு ஆலயங்களில் சனிப்பெயர்ச்சி விழா இன்று நடைபெற்றது. இந்த சனிப்பெயர்ச்சியால் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி முடிந்துள்ளது கும்பம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி ஆரம்பிக்கிறது.

சனிபகவான் நீதிமான், கர்மகாரகன், நம்முடைய ஜீவன காரகன், ஆயுள்காரகன். பொதுவாகவே சனிபகவான் 12 ராசிகளையும் கடக்க 30 ஆண்டுகாலம் எடுத்துக்கொள்வார். இப்போது தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார் சனிபகவான். மகரம் ராசியில் சஞ்சரிக்கும் சனிபகவானின் பார்வை 3,7,10ஆம் இடங்களான மீனம், கடகம், துலாம் ஆகிய ராசிகளின் மீது விழுகிறது.

சனி பகவான் ஒருவரின் ராசிக்கு 3,5,6,9,10,11 ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் கால கட்டத்தில் சங்கடங்கள் இல்லாத சந்தோஷங்களைத் தருவார். இந்த சனியின் சஞ்சாரம் பார்வையால் இரண்டரை ஆண்டுகளுக்கு மேஷம், ரிஷபம், சிம்மம், விருச்சிகம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் அதிக பலன்களையும், லாபங்களையும், வளர்ச்சியையும் பெறப்போகின்றனர்.

திருநள்ளாறில் சனிகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. சனிபகவான் பரிகார தலங்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபட்டனர். கொரோனா தடுப்பு விதிகள் பின்பற்றப்படுவதால் திருநள்ளாறில்  நள, பிரம்ம தீர்த்தங்களில் புனித நீராட பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  

சனிப்பெயர்ச்சிக்காக திருநள்ளாறு சனீஸ்வர கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. கொரானா நோய் பரவல் காரணமாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடுமையான சோதனைகளுக்கு பின்னரே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர் .

நாளைய வரலாறு செய்திக்காக,

- V.இராஜசேகரன் தஞ்சை.


Comments