முல்லைப்பெரியார் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவை குறைக்க விவசாயிகள் கோரிக்கை!!
கம்பம்: முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவைக் குறைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம் லோயர் கேம்பில் தொடங்கி பழனிசெட்டிப்பட்டி வரை முல்லைப்பெரியாறு அணையின் பாசனத்தின் மூலம் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலங்கள் இருபோக பாசன வசதி பெறுகின்றன.
இந்தாண்டு முதல்போக சாகுபடி கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி தற்போது அறுவடைப் பணிகள் துவங்கியுள்ளன. முல்லைப்பெரியாறு அணையில் இரண்டாம் போக சாகுபடிக்குத் தேவையான தண்ணீர் இருப்பதால் கம்பம், சுருளிப்பட்டி, நாரயணத்தேவன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அறுவடைக்கு முன்பாக இரண்டாம் போக சாகுபடிக்கு நாற்றாங்கால் அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அதேசமயம் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. ஞாயிற்றுகிழமை நிலவரப்படி அணையில் நீர்மட்டம் 123 அடியாகவும், அணையில் நீர் இருப்பு 3,222 மில்லியன் கன அடியாகவும், நீர் வரத்து விநாடிக்கு 674 கன அடியாகவும், வெளியேற்றம் 1089 கன அடியாகவும் உள்ளது. அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை அளவு குறைந்துள்ளது. இரண்டாம்போக சாகுபடியைக் கருத்தில் கொண்டு அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவைக் குறைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஆசி்க், தேனி.
Comments