எரிகாற்றுக்குழாய் அமைப்பதற்கு எதிரான புகாரை அடுத்து, கள ஆய்வு செய்த மதுரை எம்பி சு.வெங்கடேசன்!!

 

-MMH

மேலூரை அடுத்த கருங்காலக்குடி பகுதியில் உள்ள கிராமங்களில் விளைநிலங்களில் வேளாண்மையை அழித்து, ஐஓசி நிறுவனத்தால் எரி காற்றுக்குழாய் (LPG Gas pipe) அமைக்கப்பட்டு வருகிறது. முறையான பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யாமலும், தீர்மானிக்கப்பட்டு அறிவிக்கப்பட்ட இழப்பீடுகளை தராமலும், விவசாயம் நடந்து கொண்டிருக்கும் நிலையிலேயே அதை அழித்தும், நீர்நிலைகளின் மீதும் எரிகாற்றுக் குழாய்கள் அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.

அதற்கெதிராக கிராம மக்கள் ஒன்று சேர்ந்து போராட்டங்களை நடத்தி, அந்தப் பணிகளை நிறுத்த வைத்தனர். மேலும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர், திரு.சு.வெங்கடேசன் அவர்களிடம் புகார் அளித்திருந்தனர்.

பொதுமக்கள் அளித்த மனுவில்:

விளைநிலங்கள் வழியாகப் பதிக்கப்படும் எரிவாயுக் குழாயினால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது, மேலும் கண்மாய் குளங்கள் மற்றும் குடியிருப்பு பகுதி வழியாக செல்வதால் இயற்கை வளங்களை பாதிப்பதோடு மக்களிடம் பெரிய அச்சமும் நிலவுகிறது என்றும், இதனால் திட்டத்தை மாற்றுவழியில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது

இந்த திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்குவதிலும் பல்வேறு குளறுபடிகள் நடைபெறுகிறது.. இதனைச் சரிசெய்து, விவசாயிகளுக்கு போதிய இழப்பீடுகளை வழங்க நடவடிக்கை தேவை எனவும் வலியுறுத்தப்பட்டது. எனவே கள ஆய்வு செய்வதற்கும்,  பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திப்பதற்கும் மதுரை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்கள் கருங்காலக்குடி பகுதிக்கு வந்தார்.

அப்போது, ஏற்கனவே கையகப்படுத்தத் நிர்மானிக்கப்பட்ட இடங்களை விட கூடுதலாகப் பல இடங்களை தற்போது ஐ.ஓ.சி நிறுவனத்தினர் கையகப்படுத்தியுள்ளதாக விவசாயிகள் பலர் குற்றம்சாட்டினார். மேலும் இந்த திட்டத்தினால் ஏற்பட உள்ள ஆபத்துக்களைப் பற்றியும் மக்கள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கவலை தெரிவித்தனர். அனைத்து விஷயங்களையும் கேட்ட நாடாளுமன்ற உறுப்பினர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய

இழப்பீடுகள் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். கள ஆய்வின் முடிவில், பறம்புமலை பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் கர்ணன் மற்றும் ஃபாருக் முகமது ஆகியோர் மதுரை எம்பியைச் சந்தித்து, கல்குவாரிக்காக உடைக்கப்படும் பறம்புமலையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கோரிக்கை வைத்தனர். நிகழ்வுகளை சமூக செயற்பாட்டாளர் செல்வராஜ்  ஒருங்கிணைத்தார்.

இந்நிகழ்வுகள் முழுமையிலும் மதுரை மாவட்ட தமுமுக செயலாளர் பொறியாளர்.பக்ருதீன் அலி அகமத், மாவட்ட துணைச் செயலாளரும், தும்பைப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவருமான பாட்டையா (எ) அய்யூப்கான், கருங்காலக்குடி மக்கள் நல்வாழ்வுக் குழு நிர்வாகி வீரக்குமார் மற்றும் மார்க்சிய பொதுவுடமைக் கட்சியின் மேலூர் தாலுகா குழு செயலாளர் கண்ணன், அடக்கிவீரன், மணவாளன் ஆகியோர் உடனிருந்தனர்.

-பாரூக், சிவகங்கை.

Comments