வாகன ஓட்டிகளே உஷார் !! சென்னையில் அறிமுகமாகும் 'ஜீரோ வயலேஷன் ஜங்ஷன்'!!

     -MMH

     சென்னையில் இருசக்கர வாகன ஓட்டிகள் விதிமீறல்களைத் தடுத்து விபத்துகளைக் குறைப்பதற்காக சென்னை போக்குவரத்து காவல்துறையினர் ஜீரோ வயலேஷன் ஜங்ஷன் என்னும் திட்டத்தை கொண்டுவந்துள்ளனர். 

முதற்கட்டமாக அண்ணா சாலை ஸ்பென்சர் சிக்னல், அண்ணா ஆர்ச் சிக்னல், திருவான்மியூர் சிக்னல் மற்றும் மாதவரம் ரவுண்டானா சிக்னல் ஆகிய நான்கு சிக்னல்களிலும் இந்த ஜீரோ வயலேஷன் ஜங்க்‌ஷன் அமல்படுத்தப்பட உள்ளது.

இந்த Zero violation junction-னின் முக்கிய நோக்கம் போக்குவரத்து விதிமுறைகளை முற்றிலுமாக குறைப்பது ஆகும். விதிமுறைகள் குறைந்தாலே விபத்துகளும் குறையும். முதற்கட்டமாக அமல்படுத்தவிருக்கும் இந்த 4 ஜங்ஷன்களிலும் போக்குவரத்து காவலர்கள், சட்டம் ஒழுங்கு காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள் என 20 போலீசார்கள் எப்பொழுதும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர்.

தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட்டுகள் அணியாமல் வாகனங்களை ஓட்டுபவர்கள், இருசக்கர வாகனத்தில் 3 பேர் செல்பவர்கள், சிக்னலில் வெள்ளை கோட்டைதாண்டி வாகனங்களை நிறுத்துபவர்கள், குறிப்பாக சிக்னலில் மஞ்சள் விளக்குப் போட்டவுடன் வாகனங்களில் சீறிப்பாய்வர்களை தடுத்து நிறுத்தி உடனடியாக ரூ.500 வரை ஸ்பாட் ஃபைன் விதிக்கப்படும்.

வாகன ஓட்டிகள் யாரேனும் காவலர்களுடன் வாக்குவாதத்தில் அல்லது பிரச்சனையில் ஈடுபட்டால் அவர்கள் மீது சட்டம் ஒழுங்கு காவலர்கள் நடவடிக்கை மேற்கொள்வார்கள். முதற்கட்டமாகத் தொடங்கப்பட்ட இந்த நான்கு ஜங்க்‌ஷன்கள் மட்டுமல்லாமல் விரைவில் சென்னை முழுவதும் உள்ள சிக்னல்களில் ஜீரோ வயலேஷன் ஜங்ஷன் தொடங்கப்படும் என சென்னை போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

இதனால் சென்னையில் போக்குவரத்து விதிமீறல்கள் முற்றிலும் கட்டுப்படுத்தப்படும். அதனால் சாலை விபத்துகளும் பெருமளவில் குறைக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றார்.

-பாலாஜி தங்க மாரியப்பன், சென்னை போரூர்.

Comments