தகடு விலை கிடுகிடு உயர்வு...! பாத்திர உற்பத்தியாளர் தவிப்பு!!!

-MMH

     பொங்கல் தவலை உற்பத்திக்கு போதிய ஆர்டர் இருந்தும், தகடு விலை உயர்வால், பாத்திர உற்பத்தியாளர்கள் தவித்து வருகின்றனர்.திருப்பூரை அடுத்த வேலம்பாளையம், அனுப்பர்பாளையம், அங்கேரிபாளையம், செட்டிபாளையம், காளம்பாளையம் பகுதியில், 300 க்கும் மேற்பட்ட பாத்திர உற்பத்தி பட்டறைகள் உள்ளன. 

இவற்றில், எவர்சில்வர், பித்தளை, செம்பு, ஆகிய உலோகங்களில் பாத்திர உற்பத்தி செய்யப்படுகிறது.அடுத்த மாதம், பொங்கல் பண்டிகையையொட்டி, பொங்கல் தவலை உற்பத்தி நடந்து வருகிறது. ஆனால், மூலப்பொருளான தகடு விலை உயர்வால், உற்பத்தியாளர்கள் தவித்து வருகின்றனர்.பாத்திர உற்பத்தியாளர்கள் சிலர் கூறியதாவது:கோவை, ஈரோடு, சேலம், மதுரை, திருச்சி, சென்னை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, கார்த்திகை மாதம் முதல் பொங்கல் தவலை, 'ஆர்டர்' வர தொடங்கி உள்ளது. மூலப்பொருளான தகடு டில்லி, குஜராத் மாநிலங்களில் இருந்து வருகிறது.கொரோனா ஊரடங்கு, விவசாயிகள் போராட்டம் போன்ற பிரச்னைகளால் தகடு வரத்து குறைந்து, பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனால், எவர்சில்வர் தகடு கிலோவுக்கு, 25 ரூபாய், பித்தளை, 50 ரூபாய், செம்பு, 120 முதல் 130 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது.கொரோனா ஊரடங்கு, தீபாவளிக்கு ஊருக்கு சென்ற தொழிலாளர்கள் முழுமையாக திரும்பாததால், தொழிலாளர் பற்றாக்குறையும் ஏற்பட்டு, உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

நாளையவரலாறு செய்திக்காக, 

-முஹம்மதுஹனீப் திருப்பூர்.

Comments