போரைச் சந்திக்காமல் பின்வாங்கிய, மன்னன் ரஜினி..!!

 

-MMH

தான் அரசியல் கட்சி தொடங்கப் போவதில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் பகிரங்கமாக அறிவித்ததிலிருந்து சரியாக மூன்றாண்டுகளுக்கு முன், 2017 டிசம்பர் 31... மாவட்டவாரியாக தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்தபோதுதான் 'போர் வரும்போது சொல்லி அனுப்புகிறேன்; அதுவரை உங்க அப்பா, அம்மா, குடும்பத்தை நன்றாக பார்த்துக்குங்க' என்று தமது வழக்கமான பஞ்ச் டயலாக் ஸ்டைலில் ரசிகர்களை அறிவுறுத்தி இருந்தார் ரஜினி. அவர் சொன்ன தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் எனும் போர் விரைவில் வர உள்ளது. இந்தப் போரில் களம்காண அவரது ரசிகர்களான தளபதிகள் துடிப்பாய் காத்திருந்தபோது, போரை சிந்திக்கத் தயாராக இல்லை என்று 'மன்னன்' ரஜினி பின்வாங்கிவிட்டார். போர் வரும்போது சொல்லி அனுப்புகிறேன் எனக் கூறிவிட்டு, களம்காணாமல் பின் வாங்கியுள்ளார் ரஜினி.

காவி நிறம் பூசப் பார்க்கிறார்கள்!

கமல்ஹாசனின் பிறந்தநாளையொட்டி, கடந்த ஆண்டு நவம்பரில் அவரது அலுவலகத்தில் இயக்குநர் கே.பாலசந்தரின் சிலை திறக்கப்பட்டது. இதில் ரஜினி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிந்த பின்னர் தனது போயஸ் இல்லத்திற்கு திரும்பிய ரஜினி, அப்போது, "பாஜகவினர் அவர்களது அலுவலகத்திலும், ட்விட்டரிலும் திருவள்ளுவருக்கு காவி நிறம் அடித்திருப்பது அவர்களது தனிப்பட்ட விவகாரம். ஆனால், அதையே தமிழகம் முழுவதும் பின்பற்ற வேண்டும் என எதிர்பார்க்க்கூடாது. திருவள்ளுவருக்கு வண்ணம் பூசுவது போல எனக்கும் காவி வண்ணம் பூச பார்க்கிறார்கள். திருவள்ளுவரும் சிக்கமாட்டார், நானும் மாட்டமாட்டேன்" என்று பகிரங்கமாக கூறினார் ரஜினி. 

இவ்வாறு ஒருபுறம் கூறிக்கொண்டு, மறுபுறம் ஆன்மிக அரசியல் என்று பேசி வந்தது தமிழகத்தில் அவரை பாஜகவின் குரலாகதான் அடையாளப்படுத்தியது.

தமிழக அரசியலில் வெற்றிடம்!

2019 நவம்பர் 8 செய்தியாளர் சந்திப்பின்போது, 'தமிழக அரசியலில் ஆளுமை மிக்க தலைமைக்கு வெற்றிடம் உள்ளது' என்று கூறி, தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தினார். மறைந்த முதல்வர் கருணாநிதி மீது தமக்கு எப்போதும் மதிப்பும், மரியாதையும் உண்டு என்றும், ஜெயலலிதாவை முன்னொரு சமயம் தைரியலெட்சுமி எனவும் போற்றி புகழ்ந்தும் இருந்த ரஜினி, அவ்விரு தலைவர்களும் இல்லாத நிலையில் இப்படிக் கூறுவது, கருணாநிதியின் வழியில் வந்த ஸ்டாலினையும், ஜெயலிலதாவிடம் அரசியல் பாடம் பயின்ற ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்டோரையும் அரசியல் ஆளுமை இல்லாதவர்களாக கருதுகிறாரா? என்ற கேள்வியை எழுப்பியது.

துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி!

2020 ஜனவரி 14 அன்று துக்ளக் இதழின் பொன்விழாவில் பேசிய ரஜினி, "முரசொலி இதழை கையில் வைத்திருந்தால் திமுககாரன்னு சொல்லுவாங்க... ஆனா, துக்ளக்கை கையில் வைத்திருந்தால் உங்களை அறிவாளின்னு சொல்லுவாங்க"ன்னு தமக்கே உரித்தான பாணியில் ரஜினி பேசியது சர்ச்சை ஏற்படுத்தியது. அத்துடன் இந்தப் பேச்சின் மூலம் தானொரு வலதுசாரி ஆதரவாளன் என்பதைத் தானே பறைசாற்றிக் கொண்டுள்ளார் என்ற விமர்சனமும் எழுந்தது.

வெற்றிக்காக எதையும் செய்வார்கள்

அரைமணி நேரத்துக்கு மேல் பேசினார். அவரது பேச்சில் முக்கியமாக, "கருணாநிதியின் பெயரை காப்பாற்ற வேண்டி பொறுப்பு ஸ்டாலினுக்கு உள்ளது. ஆட்சி, அதிகாரத்தில் உள்ள அதிமுக, குபேரனையே தங்களது கையில் வைத்துள்ளனர். தேர்தலில் வெற்றிக்காக இருவரும் எந்த எல்லைக்கும் போவார்கள். இவர்களுக்கு மத்தியில் ரசிகர்களை வைத்து கொண்டு எப்படி அரசியல் செய்ய முடியும்? இதையும் தாண்டி நான் அரசியலுக்கு வர வேண்டும் என்று சொன்னால் திமுக, அதிமுகவுக்கு எதிராக தமிழக மக்கள் மத்தியில் புரட்சி, எழுச்சி வர வேண்டும். அந்த பணியை ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் செய்ய வேண்டும்" என்று படபடவென ரஜினி பேசியதிலேயே, இரண்டு ஆண்டுகளுக்கு முன் போர் வரட்டும் சொல்லி அனுப்புகிறேன் என்று அவரது பேச்சின் சுருதி குறைந்துவிட்டதை ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் உணர்ந்துவிட்டனர்.

மாத்துவோம், எல்லாத்தையும் மாத்துவோம்!

எட்டு மாதங்களுக்கு முன் புரட்சி, எழுச்சி என்று பேசியவர், திடீரென "மாத்துவோம், எல்லாத்தையும் மாத்துவோம்; ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம் இப்போ இல்லன்னா எப்போவும் இல்ல" என்று சமீபத்தில் ஒரு ட்விட்டை போட்டு, தமிழக அரசியலில் பரபரப்பை பற்ற வைத்தார் ரஜினி. அப்போ அவர் சொன்ன புரட்சி, எழுச்சி தமிழகத்தில் வந்துவிட்டதா என்று கேட்டால் ரஜினியின் தீவிர விசுவாசிகளிடமே அதற்கு பதில் இல்லை.

சரி... கமல் ஒருபுறம், ரஜினி மறுபுறம் என்று 2021 தேர்தல் செம டஃப்பாக இருக்கும் என்று அவரது ரசிகர்களும், பொதுமக்களும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில்தான் கட்சி தொடங்காமலேயே தீவிர அரசியலுக்கு முழுக்கு போடும் முடிவை ரஜினி எடுத்துள்ளார். இதற்கு அவரது உடல்நிலை மட்டும்தான் காரணமா அல்லது அரசியல் அழுத்தங்களும் காரணமா என்பது ரஜினிக்கு மட்டுமே வெளிச்சம். ஆனால், அவ்வபோதைய தமது அரசியல் ஸ்டண்ட்களின் மூலம் ரஜினி தமது ரசிகர்களுக்கு இதுநாள்வரை தவறான நம்பிக்கையை அளித்து வந்துள்ளார் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-பாரூக்.

Comments