பொன்னமராவதி அருகே வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு நாளை முன்னிட்டு வேளாண் திருவிழா..!

-MMH

பொன்னமராவதி அருகே எஸ்.புதூர் ஒன்றியத்தில், வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் - நெல் ஜெயராமன் நினைவு நாளை முன்னிட்டு தமிழக பாரம்பரிய விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் ஐந்திணை வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பாக பாரம்பரிய வேளாண் திருவிழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வருகை தந்த தமிழக விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் குமார் இருவரையும் பெண்கள் பாரம்பரிய முறையில் ஆரத்தி எடுத்து வரவேற்பளித்தனர்.

அதைத் தொடர்ந்து பாரம்பரிய விதைநெல் கண்காட்சியை கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் குமார் திறந்து வைத்தார். அங்கு பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட பாதுகாக்கப்பட்ட பாரம்பரிய நெல் வகைகளான குழுவை, மாப்பிள்ளை சம்பா, குள்ளகார், சண்டிகார், சீரகசம்பா, பவுன் தங்கச்சம்பா உள்ளிட்ட பாரம்பரிய நெல் வகைகளை இயற்கை நெல் விவசாயி சிவராமன் எடுத்துரைத்தார்.

6 அடி உயரத்தில் வளர்ந்து காட்சியளித்த மாப்பிள்ளை சம்பா நெற்பயிரை காட்டி விருந்தினர்களை அதிசயிக்க வைத்தார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற விழாவில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.  இந்நிகழ்வில் தென்னிந்திய பத்திரிகையாளர் சங்க செயல் தலைவர் மருது அழகுராஜ்,  பாரம்பரிய விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில செயலாளர் அருண் மற்றும் விரிவாக்க கல்வி இயக்கம் ஜவர்கலால், ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்வில் விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர்.பாண்டியன் பேசும்போது, 'கொரோனா பேரழிவு காலத்தையே எதிர்க்கும் சக்தி தமிழக விவசாயிகளுக்கு இருக்கிறது என்று  காலம் பறைசாற்றியது. தமிழக விவசாயி தன்னுடைய உற்பத்தி திறத்தால் உழைப்பால் கொரோனாவை எதிர்கொள்கிறார்கள்.

தமிழக விவசாயிகளால் இந்திய பொருளாதாரம் மேம்பட்டுள்ளது' என்றார். அதைத் தொடர்ந்து பாரம்பரிய நெல் வகைகள், வருகை தந்திருந்த விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. சிறந்த இயற்கை விவசாயிகள் கௌரவிக்கப்பட்டார்கள்.

எஸ்.புதூர் ஒன்றியத்தில் விதைப் பந்துகள் மூலம் காடுகள் வளர்ப்பு சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்திய பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாராட்டுப் பட்டயங்கள் வழங்கப்பட்டன.

கலந்து கொண்ட அனைத்து விவசாயிகளுக்கும் பாரம்பரிய நெல் வகைகள் மற்றும் காய்கறி விதைகள் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை தமிழக பாரம்பரிய விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், ஐந்திணை வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை, சேது பாஸ்கரா வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சிங்கம்புணரி சேவுகா அரிமா சங்கம் மற்றும் சத்தியம் குரூப் ஆப் கம்பெனிகள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன...

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-M.சதாம் உசேன்.

Comments