சசிகலாவுக்கு ஜனவரியில் காத்திருக்கும் ஷாக்!
சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்றுள்ள சசிகலாவில் தண்டனைக் காலம் பிப்ரவரி மாதம் நிறைவடைகிறது. முன்கூட்டியே அவரை விடுதலை செய்ய எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சிறை நிர்வாகம் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவருக்கு நன்னடத்தை விதிகள் பொருந்தாது என தெரிவித்தது. மேலும் சிறை சட்ட விதிகளில் மூன்று பக்க நகலும் கொடுக்கப்பட்டது.
விசாரணைக் கைதியாக இருந்த நாட்களில், பரோலில் சென்ற நாள்களை கழித்து 2021 ஜனவரி 27 ஆம் தேதி சசிகலா விடுதலையாகலாம் என்று உத்தேசமாக கூறப்படுகிறது. எனவே கர்நாடக உளவுத் துறை, தலைமை செயலாளருக்கு ஒரு அறிக்கை வழங்கியுள்ளது.
அதில், 2021ஆம் ஆண்டு ஜனவரியில் சசிகலா விடுதலையானால் அவரை வரவேற்க, தமிழகத்திலிருந்து அவரது ஆதரவாளர்கள் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கர்நாடக மாநிலத்திற்குள் நுழையலாம். இதனால் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படலாம் எனத் தெரிவித்துள்ளது.
கர்நாடக உள்துறை செயலாளர் ரூபா கடந்த வாரம் டிஜிபி மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அதில் ரூபா பேசும்போது, ஜனவரி இறுதியில் சசிகலா விடுதலையானால் கர்நாடக மாநிலத்தில் கூட்டத்தை விடாமல் தமிழக எல்லையிலேயே தடுத்துவிட திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன.
ஆனால் ரிலீஸை எதிர்பார்த்திருக்கும் சசிகலாவுக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் ஒரு விவகாரம் வெளியே வரவுள்ளது. சிறைத் துறை அதிகாரிகளுக்கு, சசிகலா தரப்பு ₹.2 கோடி லஞ்சம் கொடுத்ததாக சொல்லப்படும் விவகாரம் ஜனவரி மாதம் இரண்டாவது வாரத்தில் தூசி தட்டப்படும் என கூறப்படுகிறது.
சசிகலா ஷாப்பிங் சென்றார் என்று அந்தச் சமயம் கூறப்பட்டதுடன் ஒரு வீடியோவும் வெளியானது. அந்த நேரத்தில் சசிகலாவுக்கு எதிராக கெடுபிடி காட்டியவர் அப்போதைய கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபா. இவர்தான் தற்போது கர்நாடக உள்துறைச் செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விடுதலை தேதி நெருங்க நெருங்க மேலும் சில விவகாரங்கள் மேலெழுந்து வரும் என பெங்களூர் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
- பாரூக், சிவகங்கை.
Comments