லஞ்சம் வாங்கிய வழக்கில் இன்ஸ்பெக்டர், மனைவியைக் கொன்று, தானும் தற்கொலை!
லஞ்சம் வாங்கிய வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற இன்ஸ்பெக்டர், மனைவியைக் கொன்று, தானும் தற்கொலை! மதுரையில் பரபரப்பு! மதுரை மாவட்டம், செல்லூர் தத்தனேரி பகுதியை சேர்ந்தவர் பெருமாள் பாண்டியன். இவர் மதுரையில் லஞ்ச ஒழிப்புப் பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு அரசு மருத்துவர் ஒருவரை லஞ்ச வழக்கில் இருந்து விடுவிக்க லஞ்சம் பெற்றதாக பெருமாள் பாண்டியன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த வழக்கு மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் பெருமாள் பாண்டியன் செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டு 3 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, பெருமாள்பாண்டி பிணையில் வெளியே வந்தார். அப்போது, தண்டனை தொடர்பாக பெருமாள் பாண்டிக்கும், அவரது மனைவி உமா மீனாட்சிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது ஆத்திரமடைந்த பெருமாள் பாண்டி மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சம்பவம் அறிந்த அக்கம்பக்கத்தினர் செல்லூர் தத்தனேரி காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் தடயங்களை சேகரித்த பின்னர் இரு உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-பாரூக், சிவகங்கை.
Comments