பிறந்தநாளில் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் உருக்கம்! விவசாயிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கப் பிரார்த்தனை!

 

-MMH

இன்று பிறந்தநாள் கொண்டாடிய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், விவசாயிகளின் பிரச்சினைக்கு அமைதியான முறையில், விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் இன்று 39-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தவண்ணம் உள்ளனர். இந்நிலையில் இந்தப் பிறந்த நாளை விவசாயிகளுக்காக அர்ப்பணிப்பதாக யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். அத்துடன், விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து விளையாட்டு வீரர்கள் தாங்கள் பெற்ற விருதுகளை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என அவரது தந்தை கூறிய கருத்தை நிராகரித்துள்ளார்.

இதுதொடர்பாக யுவராஜ் சிங் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்த தேசத்தின் ரத்தநாளங்கள் விவசாயிகள்தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. விவசாயிகளின் பிரச்சினைக்கு விரைவில் அமைதியான முறையில் தீர்வு காணப்படும் என்று நம்புகிறேன். விருப்பங்களையும், ஆசைகளையும் நிறைவேற்றிக் கொள்ள கிடைத்த வாய்ப்பு பிறந்த நாள். இந்தப் பிறந்த நாளைக் கொண்டாடுவதைவிட, விவசாயிகளுக்கும், நம்முடைய அரசுக்கும் இடையே நடந்து வரும் பேச்சுவார்த்தையில் விரைவான தீர்வு கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன், பிரார்த்திக்கிறேன். இவ்வாறு யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

-பாரூக், சிவகங்கை.

Comments