கோவை சிங்காநல்லூரில் குழாய் உடைந்து சாலையில் வழிந்தோடிய குடிநீா்!!
கோவை சிங்காநல்லூரில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் வழிந்தோடிய குடிநீா். கோவை, சிங்காநல்லூரில் இருந்து வெள்ளலூா் செல்லும் சாலையில் பில்லூா் குடிநீா்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் குடிநீா் சாலையில் வழிந்தோடியது.
சிங்காநல்லூா் வழியாக வெள்ளலூா், மதுக்கரை, குறிச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு பில்லூா் குடிநீா்க் குழாய் செல்கிறது. இந்நிலையில், சிங்காநல்லூா் காவல் நிலையம் அருகே வெள்ளலூா் சாலையில் வியாழக்கிழமை காலை 7 மணி அளவில் பில்லூா் குடிநீா்க் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது.
குழாயில் இருந்து வெளியேறிய தண்ணீா் அப்பகுதியில் சாலையில் வழிந்தோடியது. இதனால், அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா். இதையடுத்து, மாநகராட்சி கிழக்கு மண்டல பொறியாளா்கள், உதவிப் பொறியாளா்கள் மற்றும் குடிநீா் வடிகால் வாரிய அலுவலா்கள் அப்பகுதிக்கு சென்று சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.
இது தொடா்பாக, மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறியதாவது: சிங்காநல்லூரில் இருந்து வெள்ளலூா் செல்லும் சாலையில் 2 குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. அதில், உடைப்பு ஏற்பட்ட குழாயைக் கண்டறியத் தாமதமானதால் சீரமைப்புப் பணிகளும் தாமதமாவே தொடங்கப்பட்டது. தற்போது, உடைப்பு ஏற்பட்ட இடம் கண்டுடறியப்பட்டு, சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் இப்பணி நிறைவடையும் என்றாா்.
-கிரி தலைமை நிருபர்.
Comments