தமிழகத்தில் 10 மாதங்களுக்கு பிறகு இன்று மீண்டும் பள்ளிகள் திறப்பு! வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகளை நடத்த அறிவுறுத்தல்!!

 

     -MMH

சென்னை: தமிழகத்தில் 10 மாதங்களுக்கு பிறகு இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. முதற்கட்டமாக 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று வகுப்புகள் தொடங்கப்படுகின்றன. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. 2020-21-ம் கல்வியாண்டுக்கான பாடங்கள் ஆன்-லைன் வழியாகவும் தொலைக்காட்சி வழியாகவும் நடத்தப்பட்டன. தற்போது 10, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நெருங்கும் நிலையில் பள்ளிகளை திறக்க கல்வித்துறை முடிவு செய்தது.

அதன்படி 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கலாமா, வேண்டாமா? என்பது குறித்து கடந்த 6, 7, 8-ந்தேதிகளில் பெற்றோரிடம் கருத்து கேட்கப்பட்டது. இதில் பெரும்பாலான பெற்றோர்கள், பள்ளிகளை திறக்கும் முடிவுக்கு ஆதரவு தெரிவித்தனர் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 19-ம் தேதி முதல் பள்ளிக்கூடங்களை திறப்பது என தமிழக அரசு முடிவு எடுத்தது.

அதன்படி இன்று 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்படுகின்றன. 10 மாத காலத்துக்கு பிறகு இன்று பள்ளிகள் திறப்பதால் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள், முன் ஏற்பாடுகள் குறித்த அரசின் வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியாகின. 

அந்த வழிமுறைகளை பின்பற்றும் விதமாக அந்தந்த பள்ளிகள் சார்பிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் பாதுகாப்பு அம்சங்களை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்யுமாறு உத்தரவிடப்பட்டது.

அதன்படி மாநிலம் முழுவதும் பள்ளிகளில் கல்வி அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டனர். சென்னை செனாய்நகரில் உள்ள திரு.வி.க. அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் ஆய்வு மேற்கொண்டார். இதேபோல சென்னை மாநகரில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு நடந்தது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-V. ருக்மாங்கதன்,சென்னை.

Comments