ஆன்லைன் மூலம் மக்காச்சோளம், உளுந்து, குறு மிளகு, வாங்கி ரூபாய் 30 லட்சம் விவசாயிடம் மோசடி செய்த பெண் கைது!!

     -MMH

கோவை. ஜனவரி. 8- தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரை சேர்ந்தவர் முத்துசாமி இவரது மகன் அசோக்குமார் (வயது 27). இவர் அந்த பகுதியில் 60 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். கொரோனா காலத்தில் விவசாயம் செய்ய விவசாய நகை கடன் பெற்று உளுந்து, மக்காசோளம், பயிரிட்டுள்ளார். சாகுபடி செய்த விளைச்சலை விற்பனை செய்ய ஆன்லைனில் பதிவிட்டிருந்தார். 

இந்த நிலையில் கோவை, வேலந்தாவனம் பகுதியில் செயல்பட்டுவரும் ஆன்லைன் டிரேடிங் நிறுவனத்தினர் கடந்த ஜூலை மாதம் அசோக்குமாரை தொடர்புகொண்டு உளுந்து மற்றும் மக்காசோளம் வேண்டும் என்று கேட்டுள்ளனர். இதையடுத்து அசோக்குமார் ரூபாய் 13 லட்சம் மதிப்பிலான 2 டன் உளுந்து மற்றும் மக்காச்சோளம் விற்பனை செய்துள்ளார். இதற்காக முதல்கட்டமாக அந்த நிறுவனம் ரூபாய் 2.25 லட்சம் மட்டுமே பணம் கொடுத்தனர். நீண்ட நாட்களாக மீதி பணத்தை கொடுக்காமல் இருந்த நிலையில் நிலுவையில் உள்ள பணம் குறித்து நிறுவன உரிமையாளரான கோவை சிவானந்தா காலனியைச் சேர்ந்த லூர்து மேரி (40), என்பவரிடம் அசோக்குமார் கேட்டுள்ளார். ஆனால் தொடர்ந்து அவர் பணம் தராமல் ஏமாற்றி வந்ததாக தெரிகிறது. 

இந்த நிலையில் நேற்று கோவை வந்த அசோக்குமார் இதுகுறித்து காக்கா சாவடி போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் லூர்து மேரியை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் லூர்து மேரி கோவை வேளாந்தாவளம் சாலையில் தனியார் கட்டிடத்தில் அறையை வாடகைக்கு எடுத்து ஆதி டிரேடர்ஸ் என்ற பெயரில் ஆன்லைன் டிரேடிங் செய்யும் நிறுவனத்தை நடத்தி வந்ததும் இணையதளம் மூலம் தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளை தொடர்பு கொண்டு விளைபொருள்களை பெற்று பணம் கொடுக்காமல் ஏமாற்றி வந்ததும் தெரியவந்தது. 

கூடலூரை சேர்ந்த கமலநாதன் என்பவரிடம் ரூபாய் 3.60 லட்சம் மதிப்பிலான குறுமிளகு, ஞானமுருகன் என்பவரிடமிருந்து ரூபாய் 5.75 லட்சம் மதிப்பிலான முந்திரி, மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த வைபவ் என்பவரிடம் ரூபாய் 10.26 லட்சம் மதிப்பிலான மஞ்சள் கொள்முதல் செய்து பணம் கொடுக்காமல் ஏமாற்றி வந்தது தெரியவந்தது. மேலும் விவசாயிகளிடம் மோசடி செய்த பணத்தில் சொகுசு கார் வாங்கி ஆடம்பரமாக வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து  லூர்து மேரியை போலீசார் கைது செய்தனர். பின்னர் டான்ஸ் பிட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

-சீனி, போத்தனூர்.

Comments