உற்பத்தி ஆலையில் ஜேசிபி எந்திரத்துடன் கண்மூடித்தனமாக நுழைந்த ஊழியர் !!

     -MMH

     ஸ்பெயின்: உற்பத்தி ஆலையில் ஜேசிபி எந்திரத்துடன் நுழைந்த ஊழியர் கண்மூடித்தனமாக 50க்கும் மேற்பட்ட வாகனங்களை அடித்து நொறுக்கியிருக்கின்றார். இதுகுறித்த தகவலை இப்பதிவில் காணலாம்.

பென்ஸ் நிறுவனத்திற்கும், ஊழியருக்கும் ஏற்பட்ட மோதல் தற்போது 50 புதிய சொகுசு வேன்கள் நொறுங்கியதில் முடிவடைந்துள்ளது. அண்மையில் நிறுவனத்திற்கே தெரியமால் பல்வேறு விதி மீறல்களில் ஈடுபட்டதன் காரணத்தினால் ஸ்பெயின் நாட்டில் செயல்பட்டு வரும் உற்பத்தி ஆலையில் இருந்து பணியாளர் ஒருவரை பென்ஸ் வெளியேற்றியது.

இதனால் ஏற்பட்ட மோதலின் காரணத்தினாலயே அந்த முன்னாள் ஊழியர் பென்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட சொகுசு வேன்களை புல்டவுசர் எனப்படும் ஜேசிபி எந்திரத்தைக் கொண்டு அடித்து நொறுக்கியிருக்கின்றார். 2020ம் ஆண்டின் கடைசி நாளில் ஊழியர் நிறுவனத்தை விட்டுவெளியேற்றப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

அன்றைய தினமே இத்தகைய விரோத செயலில் முன்னாள் பணியாளர் ஈடுபட்டிருக்கின்றார். நிறுவனம் மற்றும் ஊழியருக்கு இடையே ஏற்பட்ட மோதல் பற்றிய தகவல் வெளியாகவில்லை. இருப்பினும், பல முறை எச்சரிக்கை பின்னரே அப்பணியாளர் வெளியேற்றப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடகிழக்கு ஸ்பெயினில் செயல்பட்டு வரும் இந்த உற்பத்தி ஆலை பிரத்யேகமாக சொகுசு வேன்களையே அதிகளவில் உற்பத்தி செய்து வருகின்றது. இதுவே பென்ஸ் நிறுவனத்தின் இரண்டாம் மிகப் பெரிய உற்பத்தி ஆலை ஆகும். இந்த ஆலையிலேயே அத்துமீறி நுழைந்த முன்னாள் ஊழியர் கண்ணிமைக்கும் நேரத்தில் அனைத்து வாகனங்களையும் நொறுக்கியிருக்கின்றார்.

வாகனங்களை நொறுக்குவதற்கு பயன்படுத்தப்பட்ட ஜேசிபி வாகனம்கூட திருடப்பட்ட வாகனம் என கூறப்படுகின்றது. இதனை ஸ்பெயினின் உள்ளூர் ஊடகம் தெரிவித்திருக்கின்றது. மேலும், சம்பவம் நடந்தபோது நள்ளிரவு 1 மணி இருக்கும் என்று அப்போது ஆலையில் பணியாற்றிய பாதுகாவலர்கள் கூறுகின்றனர். அந்த நேரத்தில் சொற்பளவிலான பணியாளர்கள் மற்றும் பாதுகாவலர்கள் மட்டுமே பணியாற்றியிருக்கின்றனர்.

ஆகையாலே அந்த நபரைக் கட்டுப்படுத்த முடியாமல் பாதுகாவலர்கள் திணறியிருக்கின்றனர். இந்த நிலையிலேயே துப்பாக்கி முனையில் அவரை பிடித்து பாதுகாவலர்கள் போலீஸிடத்தில் ஒப்படைத்தனர். நொறுக்கப்பட்ட அனைத்து வேன்களும் புத்தம் புதிய சொகுசு வாகனங்கள் ஆகும். அவை, வி கிளாஸ் மற்றும் விடோ வேன்கள் ஆகும்.

கடந்த 2020ம் ஆண்டைப் போன்று இந்த புத்தாண்டும் இருந்து விடக்கூடாது என்பதே அனைவரின் எண்ணமுமாக இருக்கின்றது. இந்த நிலையிலேயே மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்திற்கு இத்தகைய துரதிர்ஷ்ட வசமான சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. மேலும், அத்துமீறிய முன்னாள் பணியாளரால் சுமார் 6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான சேதம் ஏற்பட்டுள்ளது.

-சுரேந்தர்.

Comments