சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெற்றோரிடம் கருத்து கேட்பு கூட்டம்!
பொங்கலுக்கு பிறகு 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புக்களை திறப்பது குறித்து பெற்றோர்களின் கருத்துக்கள் கேட்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்தது. அதன்படி, சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10,12-ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோரிடம் பள்ளிகள் திறப்பு குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அமிர்தலிங்கம் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் அன்பு முன்னிலை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் ராமலிங்கம் வரவேற்றார். இதைெதாடர்ந்து, 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது. கூட்டத்தில் சுமார் 160-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து கொண்டனர். அதில் 96 சதவீதம் பேர் பள்ளிகளை திறக்கலாம் என எழுத்துப்பூர்வமாக தெரிவித்தனர்.
முன்னதாக கருத்து கேட்பு கூட்டத்திற்கு வந்த அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பள்ளியின் கூட்டம் நடைபெறும் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதேபோல் சிங்கம்புணரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது.
இது தொடர்பாக சிவகங்கை மாவட்ட முதன்மைகல்வி அதிகாரி பாலமுத்து கூறும்போது, பள்ளிகல்வித் துறை மூலம் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் கருத்து கேட்பு நடைபெற்று வருகிறது. இன்றும் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும். இதன் முடிவில் பெற்றோர் தெரிவிக்கும் கருத்துக்கள் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்தார்.
-அப்துல்சலாம், திருப்பத்தூர்.
Comments