'புலனாய்வுப் புலி' ஜூலியன் அசாஞ்சேவை நாடு கடத்த முடியாது! பிரிட்டன் நீதிமன்றம் அதிரடி!

     -MMH

     பிரிட்டன்: விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்த அனுமதிக்க முடியாது என்று பிரிட்டன் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜூலியன் அசாஞ்சே, விக்கி லீக்ஸ் இணையதளத்தின் நிறுவனர். ஆப்கானிஸ்தானில் அமெரிக்க நடவடிக்கைகள், அமெரிக்காவின் போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், உளவு பார்த்தது உள்ளிட்ட ராணுவ ரகசிய ஆவணங்களை கடந்த 2010ஆம் ஆண்டு அசாஞ்சே வெளியிட்டார். அவர் வெளியிட்ட தகவல்கள் உலக நாடுகளிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையடுத்து, ஜூலியன் அசாஞ்சே மீது உளவு பார்த்தல் உள்பட 18 வழக்குகளை பதிவு செய்த அமெரிக்கா, அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்த முயன்றது. அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அவரை 175 ஆண்டுகளை வரை அமெரிக்க சிறையில் அடைக்க முடியும் என்பது கவனிக்கத்தக்கது.

இதனிடையே, ஜூலியன் அசாஞ்சே தங்கியிருந்த ஸ்வீடன் நாட்டில் அவர் மீது பாலியல் குற்றம் சுமத்தப்பட்டது. அந்த சமயத்தில் அவரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அமெரிக்கா ஸ்வீடன் நாட்டுக்கு பல நெருக்கடிகளை தந்தது. இந்த சூழலில் அங்கிருந்து தப்பிச் சென்ற அவர், லண்டனில் உள்ள ஈகுவடார் நாட்டு தூதரகத்தில் 2012ஆம் ஆண்டு தஞ்சமடைந்தார்.

ஆனால், 2019ஆம் ஆண்டில் ஈகுவடார் நாட்டு தூதரகத்தில் நுழைந்த பிரிட்டன் போலீசார், அவரை கைது செய்து லண்டனில் உள்ள பெல்மார்ஷ் சிறையில் பலத்த பாதுகாப்புடன் அடைத்தனர். தொடர்ந்து, ஜூலியன் அசாஞ்சேவை தங்களிடம் ஒப்படைக்கக்கோரி அமெரிக்கா இங்கிலாந்திடம் கோரியது. ஆனால், தன்னை அமெரிக்காவிடம் ஒப்படைக்கக் கூடாது என்று கோரி லண்டன் நீதிமன்றத்தில் ஜூலியன் அசாஞ்சே மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை பல கட்டங்களாக நடைபெற்று வந்த நிலையில், விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்த அனுமதிக்க முடியாது என்று லண்டன் நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்து உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், அவர் பெல்மார்ஷ் சிறையிலேயே அடைக்கப்படுவார் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனாலும், தனக்கு ஜாமீன் கோரி ஜூலியன் அசாஞ்சே மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறவுள்ளது. இந்தத் தீர்ப்புக்கு பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-பாருக்.

Comments