சென்னை போரூரில் கேபிள் டிவி உரிமையாளர் வெட்டிக் கொலை..!
சென்னை போரூரில் கேபிள் டிவி உரிமையாளர் பொன்னுரங்கம் வெட்டிக் கொலை. போரூர் அருகே நிலத் தகராறில் கேபிள் டிவி ஆப்பரேட்டர் பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை போரூர் அடுத்த முகலிவாக்கம், குருசாமி நகர், பாரதியார் தெருவை சேர்ந்தவர் பொன்னுரங்கம்(55). இவர் சொந்தமாக கேபிள் டிவி தொழில் செய்து வந்தார். தனது மகன் தானேஷ்வரன் என்பவருடன், கேபிள் டிவி ஒயர் பழுது பார்க்கும் பணியை பார்வையிட மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். மதனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பழனி வீட்டின் அருகே சென்றபோது ஆட்டோ மற்றும் மொபெட்டில் வந்த 6 பேர் கொண்ட மர்மகும்பல் பொன்னுரங்கத்தின் வாகனத்தை வழிமறித்து கத்தி மற்றும் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் அவரை சராமாரியாக வெட்டினர்.
இதனை தடுக்க முயன்ற அவரது மகனையும் அந்த கும்பல் கை மற்றும் கால் பகுதியில் வெட்டிவிட்டு தப்பியோடினர். இந்த சம்பவத்தில் தலையில் படுகாயம் அடைந்த பொன்னுரங்கம் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போரூர் உதவி ஆணையர் அசோகன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த தானேஷ்வரனை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். தொடர்ந்து, பொன்னுரங்கம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
கொலை சம்பவம் குறித்து மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, 4 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், நிலத்தகராறு தொடர்பாக நேற்று இரவு பொன்னுரங்கத்திற்கு மர்மநபர்கள் செல்போனில் கொலை மிரட்டல் விடுத்ததாகவும், இதுதொடர்பாக அவர் மாங்காடு போலீசில் புகார் அளித்த நிலையில் கொலை சம்பவம் அரங்கேறியது தெரியவந்துள்ளது. இதனிடையே, சாலையில் பட்டப்பகளில் கேபிள் டிவி ஆப்பரேட்டர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.
-பாலாஜி தங்கமாரியப்பன் சென்னை போரூர்.
Comments