கொரோனா தடுப்பூசியைப் பெற்ற பிறகு பெண் மருத்துவர் மருத்துவமனையில் அனுமதி!!

     -MMH

     மெக்ஸிகோ: ஃபைசர் கொரோனா தடுப்பூசியைப் பெற்ற பிறகு சுகாதார ஊழியருக்கு கடுமையான ஒவ்வாமை எதிர்விளைவு ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பரவத் தொடங்கி ஓராண்டை கடந்துவிட்ட நிலையில், தற்போது தான் உலக நாடுகள் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன. மேலும் கொரோனா தடுப்பூசிகளும் பயன்பாட்டுக்கு வரத்தொடங்கியுள்ளதால் மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஆனால் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு கடுமையான எதிர்விளைவுகள் ஏற்படுகிறது என்ற செய்திகளும் வந்துகொண்டு தான் இருக்கின்றன.

அந்த வகையில், மெக்ஸிகோவில் 32 வயதான பெண் மருத்துவர் ஒருவர் ஃபைசர்-பயோஎன்டெக் கோவிட் -19 தடுப்பூசி பெற்ற பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

வலிப்பு, சுவாசிப்பதில் சிரமம் மற்றும் தோல் சொறி போன்றவற்றை சந்தித்த மருத்துவர், வட மாநிலமான நியூவோ லியோனில் உள்ள ஒரு பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து அந்நாட்டு சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "அந்த மருத்துவருக்கு, மூளை மற்றும் முதுகெலும்புகளின் வீக்கம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. மருத்துவர் ஒவ்வாமை எதிர்விளைவுகளின் வரலாற்றைக் கொண்டிருப்பதாகவும், தடுப்பூசி பயன்படுத்தப்பட்ட பின்னர் மூளையில் வீக்கம் உருவானது என்பதற்கான மருத்துவ பரிசோதனைகளில் இருந்து எந்த ஆதாரமும் இல்லை என்றும் அமைச்சகம் கூறியது.

ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் ஆகியவற்றை உடனடியாக கருத்து தெரிவிக்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளது. மெக்ஸிகோவில் கடந்த மாதம் 24-ம் தேதி முதல், சுகாதார ஊழியர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

-சுரேந்தர்.

Comments