கோவை பேருந்து நிலையத்தில் அநியாயம்!! - வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பு.!!!
கோவை, காந்திபுரம் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில், உயர் அதிகாரிகள் துணையோடு கொள்ளை நடைபெற்று வருவதாக பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கோவை, காந்திபுரம் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் நான்காவது பிளாட்பாரம் மற்றும் அதன் மேல்தளத்தில், வாகன நிறுத்துமிடம் செயல்படுகிறது. இங்கு வழங்கும் ரசீதில், உதவி கமிஷனர் பெயரை குறிப்பிட்டு, கோவை மாநகராட்சி மத்திய மண்டலம், கட்டணம் ரூ.5 என, அச்சிடப்பட்டுள்ளது.
வாகனங்கள் நிறுத்துவதற்கு, ஆறு மணி நேரத்துக்கு ரூ.5, 12 மணி நேரத்துக்கு ரூ.10, 24 மணி நேரத்துக்கு ரூ.20 என, அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது.
அதேநேரம், வாகனம் நிறுத்த வருவோரிடம், முன்கூட்டியே, ஒரு நாளுக்கான கட்டணம் என கூறி, 20 ரூபாய் வசூலிக்கின்றனர். ஆனால், வெறும் 5 ரூபாய்க்கான ரசீது மட்டுமே வழங்குகின்றனர். மீதம் உள்ள ரூ. 15, முறைகேடாக, அதிகாரிகளுக்குச் செல்வதாக புகார் கூறப்படுகிறது.
இது தொடர்பாக மாநகராட்சி ஊழியர்களிடம் பேசிய போது, 'வாகனம் நிறுத்துமிடத்தில், கட்டணம் வசூலிக்கும் உரிமம் இதுவரை தனியாருக்குதான் ஏலமிடப்பட்டு வந்தது. ஆனால், இங்கு இன்னும் ஏலதாரர் நிர்ணயம் செய்யவில்லை. இதனால், ஊழியர்களை நியமித்து, மாநகராட்சி நிர்வாகமே வசூலிக்கிறது.
வசூலாகும் தொகையை, கருவூலகத்தில் செலுத்த வேண்டும். குறிப்பிட்ட தொகையை செலுத்தி விட்டு, மீதி தொகையை, அதிகாரிகள் மட்டத்தில் சிலர் பங்கிட்டுக் கொள்கின்றனர் என பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.
எனவே, இது தொடர்பாக உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-கிரி.
Comments