சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு சிறை தண்டனை! ₹.25 ஆயிரம் அபராதம்!

 

-MMH

மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை அமல்படுத்துமா தமிழக அரசு?தற்போது எல்லா ஊர்களிலும் தலைக்கவசம் அணியாமலும் மற்ற எந்த வாகனங்களையும் பொருட்படுத்தாமலும், இரு சக்கர வாகனங்களில் சிறுவர்கள் சுற்றிக்கொண்டிருப்பதைக் காணலாம்.

இதில், பெரும்பான்மையாக இருப்பது, பத்தாம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள். பல்வேறு காரணங்களை கூறி பெற்றோரும் அலட்சியமாக தங்கள் பிள்ளைகளை வாகனம் ஓட்ட அனுமதிக்கின்றனர். விதிகளை மீறி சிறுவர்கள் வாகனங்களை இயக்குவதால், அவர்கள் மட்டுமின்றி எதிரே வருவோரும் விபத்துக்குள்ளாகின்றனர்.

கோவை ரத்தினபுரியை சேர்ந்த 17 வயது சிறுவன் கடந்த ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி தனது நண்பனை அழைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்றபோது, காந்திபுரத்தில் பேருந்து மோதியதில் பின்னால் அமர்ந்திருந்த 16 வயது சிறுவன் உயிரிழந்தார். 18 வயது நிரம்பாத சிறுவன் வாகனத்தை ஓட்டி சென்று விபத்தை ஏற்படுத்தியதால் வாகனத்தின் உரிமையாளரான அவரது தாயார் பாண்டீஸ்வரி மீது போக்குவரத்து போலீஸார் தனியாக வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு, கோவை நீதித்துறை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் (எண்: 8) நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வாகன உரிமையாளரான பாண்டீஸ்வரியை, நீதிமன்றம் கலையும் வரை குற்றவாளி கூண்டில் நிற்க வைத்து ஒருநாள் தண்டனை, ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து கடந்த 25-ம் தேதி தீர்ப்பளித்தார். ஆனால், இன்னும் தமிழக அரசு மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை அமல்படுத்தாதால் இதுபோன்று 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் வாகனத்தை இயக்க அனுமதிக்கும் பெற்றோர் மீது போக்குவரத்து போலீஸாரும், போக்குவரத்து துறையினரும் அதிகபட்ச நடவடிக்கை எடுக்க முடியாத நிலை உள்ளது.

இதுதொடர்பாக போக்குவரத்துதுறை அதிகாரிகள் கூறியதாவது, 'போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கப் பயன்படுத்தப்படும் விதிகளில் பழைய சட்டப்படி அபராதம் விதிக்கவே வழிவகை உள்ளது. 

தற்போது மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தின்படி அபராதம் விதிக்கப்படுவதில்லை. சிறுவர்கள் வாகனம் ஓட்டினால், ஓட்டுநர் உரிமம் இல்லாதவரை வாகனம் ஓட்ட அனுமதித்ததற்காக மோட்டார் வாகன சட்டப்பிரிவு 180-ன் படி ₹.1,000, ஓட்டுநர் உரிமம் இல்லாததற்காக சட்டப்பரிவு 181-ன் கீழ் ₹.500 என மொத்தம் ₹.1,500 வரை மட்டுமே தற்போது பெற்றோருக்கு அபராதம் விதிக்க முடியும்.

ஆனால், இதே விதிமீறலுக்கு 2019-ம் ஆண்டு மோட்டார் வாகன திருத்த சட்டப் பிரிவு 199-ன் படி பெற்றோருக்கு ₹.25 ஆயிரம் அபராதமும், 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் விதிக்க முடியும். எனவே, புதிய சட்டத் திருத்தம் அமலானால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகன ஓட்ட அனுமதிக்க மாட்டார்கள்' இவ்வாறு அவர்கள் கூறினர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-பாரூக்.

Comments