மாங்காய் வாங்க வந்த பலே கொள்ளைகாரி! அதிரடியாகக் கைது செய்த காவல்துறை! 25பவுன் நகை பறிமுதல்!

     -MMH

     சேலத்தில் கர்ப்பிணி மகளுக்கு மாங்காய் வேண்டும் என கேட்டு நைசாக வீட்டிற்குள் புகுந்து 25 பவுன் வைர நகைகளை அபேஸ் செய்த பிரபல கொள்ளைக்காரியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சேலம் கோரிமேடு அருகில் உள்ள கோம்பைப்பட்டியை சேர்ந்தவர் நந்தகுமார். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி பார்வதி (60). இவர்களது மகள் கோவையில் உள்ள கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். மகளுக்கு சொந்தமான தங்க, வைர நகைகளை பார்வதி வங்கியின் லாக்கரில் வைத்திருந்தார். சேலத்தில் நடக்கும் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக லாக்கரில் இருந்து கடந்த 10ம் தேதி நகைகளை எடுத்து வந்து வீட்டின் பீரோவில் வைத்திருந்தார்.

மூதாட்டி பார்வதி தோட்டத்தில் மாமரம், தென்னை மரங்கள் இருக்கிறது. இவர் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு மாங்காய் விற்பனை செய்வார். அதன்படி 10ம்தேதி காலை, சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், பார்வதி வீட்டிற்கு வந்தார். தனது மகள் கர்ப்பிணியாக இருப்பதாகவும், 2 மாங்காய் வேண்டும் எனவும் கேட்டுள்ளார். அப்போது பார்வதி, மரத்தில் மாங்காய் இல்லையே என கூறியிருக்கிறார். வெளிப்பகுதியில் இருந்து பார்த்தேன், 2 மாங்காய் தெரிகிறது என்று அந்த பெண் கூறியுள்ளார்.

கர்ப்பிணி மகளுக்கு மாங்காய் கேட்கிறாரே என்ற எண்ணத்தில் வெளியே இருக்குமாறு கூறிவிட்டு மூதாட்டி மாங்காய் பறிக்கச் சென்றார். சிறிது நேரத்தில் அந்த பெண் மின்சார அலுவலகத்திற்கு சென்று வருவதாக கூறி, தோட்டத்திற்கு வந்துள்ளார். மாங்காயை வாங்கிவிட்டு சென்றுவிடலாம் என்று வந்தேன் என கூறி 2 மாங்காய்க்கான பணத்தை கொடுத்துவிட்டு சென்றார். இதனிடையே மறுநாள் திருமணத்திற்கு வந்த மகளுக்கு நகையை எடுத்துக்கொடுக்க பீரோவை திறந்து பார்த்தபோது அங்கு நகைகள் இல்லாததை கண்டு பார்வதி அதிர்ச்சியடைந்தார். அந்நேரத்தில் மாங்காய் வாங்க வந்த பெண் மீது சந்தேகம் அடைந்த பார்வதி, அதுபற்றி கன்னங்குறிச்சி போலீசில் புகார் செய்தார்.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் நித்தியா தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் போலீஸ் ஸ்டேசனில் உள்ள பெண் கொள்ளையர்கள் பற்றிய படங்களை எடுத்துக்ெகாண்டு, சந்தேகமாக இருப்பவர்களை அடையாளம் காட்டுமாறு கூறினர். அதில் பிரபல கொள்ளைக்காரி மைதிலி (40) படத்தை மூதாட்டி பார்வதி அடையாளம் காட்டினார்.

உடனடியாக விரைந்து சென்ற போலீசார், கொண்டப்பநாயக்கன்பட்டியில் இருந்த கொள்ளைக்காரி மைதிலியை மடக்கி பிடித்தனர். தொடர் விசாரணையில், மூதாட்டி பார்வதி வீட்டில் கொள்ளையடித்தது நான் தான் என ஒப்புக்கொண்டார். 

அவரிடம் இருந்து வைரத்திலான தோடு, நெக்லஸ், வளையல் மற்றும் தங்க ஆரம் என மொத்தம் 25 பவுன் நகையை பறிமுதல் செய்தனர். வங்கியில் இருந்து நகையை எடுத்து வந்ததை தெரிந்து கொண்டு, மாங்காய் வாங்குவது போல நடித்து நகைகளை அபேஸ் செய்ததாக போலீசாரிடம் மைதிலி தெரிவித்தார். இவர் மீது 25க்கும் மேற்பட்ட நகை அபேஸ் வழக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது. மைதிலிக்கு கொரோனா பரிசோதனை செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

-சோலை. ஜெய்க்குமார், சேலம்.

Comments