தந்தை ஆசையாகக் கொடுத்த ஃப்ரைட் ரைஸ்! சாப்பிட்ட 2 குழந்தைகள் பலி! எமனாகும் ஃபாஸ்ட் புட் உணவுகள்?
நேபாளத்தில் இருந்து வேலைக்காக தமிழ்நாடு வந்து, திருப்பூர் தண்ணீர்ப் பந்தல் பகுதியில் வசதித்து வருகின்றனர், சந்தோஷ் - ஆர்த்தி தம்பதி. அவர்களின் குழந்தைகள் பிரையன், பிரியங்கா அனில்.
சந்தோஷ் அதே பகுதியில் உள்ள தனியார் பாஸ்ட் புட் ஓட்டல் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர் ஓட்டலில் வேலை முடிந்தவுடன், மீதமான ப்ரைடு ரைஸ் மற்றும் நூடுல்ஸ் எடுத்துச் சென்று குழந்தைகளுக்குக் கொடுப்பதை வழக்கமாக செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று அதேபோல் ப்ரைடு ரைஸ் எடுத்து சென்று குழந்தைகளுக்குக் கொடுத்துள்ளார். குழந்தைகளும் அப்பா கொடுத்த ப்ரைடு ரைஸை ஆசையாகச் சாப்பிட்டு முடித்து இரவு தூங்கியிருக்கிறார்கள்.
பின்னர் காலையில் எழுந்த போது, மூத்த மகன் பிரையன் பேச்சு மூச்சற்று கிடந்துள்ளான். உடனே அவனை சந்தோஷ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர் பிரையன் ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறினர். அப்போது சந்தோஷ் அருகே இருந்த மற்றொரு குழந்தையான பிரியங்காவும் மருத்துவமனையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து, உயிரிழந்த குழந்தைகளின் உடல்களைப் பிரேதப் பரிசோதனைக்கு மருத்துவர்கள் அனுப்பிவைத்தனர். இந்த சோதனையில், இரவு நேரத்தில் காலதாமதமாக ப்ரைடு ரைஸ் சாப்பிட்டதால், உணவு செரிக்காமல் குழந்தைகள் இறந்திருப்பது தெரியவந்தது. மேலும், செரிக்காமல் இருந்த குழந்தைகளின் உடல் பாகங்கள் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து வேலம்பாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இரவு நேரங்களில் ப்ரைடு ரைஸ் மற்றும் நூடுல்ஸ் போன்ற செரிமானம் ஆகாத துரித உணவுகள் கொடுப்பதைப் பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-பாரூக்.
Comments