40 லட்சத்தை திரும்பத் தராமல் மிரட்டும் அதிமுக எம்எல்ஏ! கதறும் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்!

 

-MMH

     ராதாபுரம் தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் இன்பதுரை, தன்னிடம் 40 லட்சம் ரூபாயைப் பெற்றுக் கொண்டு, திருப்பிக் கேட்டால் ரவுடிகளை வைத்து மிரட்டுவதாக, ஓய்வுபெற்ற அரசு அலுவலர் ஒருவர் திருநெல்வேலி சரக காவல் துணைத் தலைவரிடத்தில் புகாரளித்துள்ளார்.

அதில், “ராதாபுரம் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் இன்பதுரை, எனது மகன் மூலமாக என்னிடமிருந்து சொந்த பணிகளுக்காக 40 லட்சம் ரூபாய் கேட்டதன் பெயரில், எனது மகன் வங்கிக் கணக்கு மூலமாக அவரின் சென்னை உயர் நீதிமன்ற இந்தியன் வங்கிக் கணக்கிற்குச் செலுத்தப்பட்டது. அதற்கான வங்கி ஆவணம் தன்னிடம் உள்ளது. 22-02-2019 அன்று பணம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அவர் பணத்தைத் திருப்பிக் கொடுக்கவில்லை. நேரில் சென்று கேட்டாலும் தர மறுக்கிறார். மேலும் தொலைபேசி மூலமாகவும், நேரடியாகவும் ரவுடிகளை வைத்து மிரட்டிவருகிறார்.

இது குறித்து சம்பந்தப்பட்ட காவல் நிலையம், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் அளித்தும் இதுவரை பணம் பெற்றுத்தருவது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தற்போது டிஐஜியிடம் புகாரளித்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை உறுப்பினர் 40 லட்ச ரூபாய் வாங்கிக் கொண்டு தன்னை ஏமாற்றியதாக ஓய்வுபெற்ற அரசு அலுவலர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளது, ராதாபுரம் தொகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

-பாரூக்.

Comments