சென்னையில் இப்படி ஒரு இடமா..? தினமும் 4,000 பச்சைகிளிகளுக்கு உணவு வழங்கும் மனிதநேயர் சுதர்சன்!!

     -MMH
     சென்னையில் தினமும் 4000 கிளிகளுக்கும் மேல் உணவளித்துக் கொண்டிருக்கும் மனிதநேயர் சுதர்சன் கூறுகையில்:-

"என் பேர் சுதர்சன். நான் 10 வருஷமா இந்த கிளிகளுக்கு அப்பாவா இருக்கேன். இவங்களுக்கு சாப்பாடு போட்டு பாதுகாத்து வச்சிருக்கேன். 10 வருஷமா இந்த கிளிங்களோட இனப்பெருக்கம் அதிகமாகிட்டு இருக்குதே தவிர, குறைந்தபாடில்ல, நான் ஒரு 10 வருஷத்துக்கு முன்னாடி, என் வீட்டு மொட்டை மாடிக்கு வந்தேன். அப்போ, கிளிகள், குருவிகள் அங்கயும் இங்கயும் அலைந்து கொண்டு இருந்தன. உணவு தேடி அலைவது போல எனக்கு தெரிஞ்சது. அப்போதிலிருந்து தான் உணவு வைக்க ஆரம்பிச்சேன். காகங்கள், குருவிகள், மைனாக்கள்-லாம் வந்து சாப்பிட ஆரம்பிச்சுதுங்க.

காலப்போக்குல இந்த கிளிங்க வர்றது அதிகமாகிடுச்சு. ஆனால், கிளிங்க தானியத்தை சாப்பிடுறதில்ல.. சூரியகாந்தி விதைகளையும் வச்சுப் பார்த்தேன், சாப்பிடல. அதுக்கப்புறம் அரிசியை ஊற வச்சு போட ஆரம்பிச்சேன். அரிசியை சாப்பிட ஆரம்பிச்சாங்க. வேர்க்கடலை தான் கிளிகளின் ஃபேவரைட்

ஒரு நாளைக்கு 4 கிலோ வேர்க்கடலை போட ஆரம்பிச்சேன். இப்போ தினமும் 5000, 6000 கிளிகள் வந்து சாப்பிடுறாங்க. கிளிகளுக்கு மழைக்காலத்துல, குளிர் காலத்துல நிறைய செலவாகும். வெயில் காலத்துல கொஞ்சம் கம்மியா இருக்கும். 1,500 ரூபாய்க்குள்ள செலவாகும்.

'ஏன் இதெல்லாம் தேவையில்லாம பண்றீங்கனு' எல்லோரும் முதல்ல எதிர்ப்புத் தெரிவிச்சாங்க. ஆனா, நான் பண்றதை பார்த்துட்டு, கிளிகள் வர்றதை பார்த்துட்டு எல்லாருக்கும் ரொம்ப விருப்பம் ஆகிடுச்சு. என்னைப் பார்த்தும் என் மனைவியும் இப்போ கூட சேர்ந்து சர்வீஸ் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க

முதல்ல 2000 கிளிகள் வர்றதை ஆச்சர்யமா பார்த்துட்டு இருந்தோம். இப்போ 5000, 6000-னு கிளிங்க வருது. கட்டுப்படுத்த முடியல. அதுவும் மழைக்காலத்தில் 10,000 கூட வரும். கல்யாணத்துல உட்கார்ந்து சாப்பிடறது போல, பந்தி பந்தியா உட்கார்ந்து சாப்பிடுவாங்க. பேட்ச் பேட்சா வந்து சாப்பிட்டு போவாங்க. எவ்ளோ மழை, புயல் அடிச்சாலும், இவங்க வந்து சாப்பிட்டு போறது குறையாது. ஒரு நாளைக்கு 70 கிலோ அரிசி வாங்க வேண்டியிருக்கும். செலவு 1500 லிருந்து 2000 வரை ஆகும்

மொத்தமாவே சென்னையில மரங்கள் ரொம்ப கம்மி ஆகிடுச்சு. அதுனால அவங்களுக்கு தேவையான உணவும் கிடைக்கல. மரங்கள் பற்றாக் குறையினால அவங்களுக்கு எங்க சாப்பாடு கிடைக்குதோ அங்க வர ஆரம்பிச்சுட்டாங்க. நாம கூட, எந்த ஹோட்டல்ல நல்ல சாப்பாடு கிடைக்கும்-னு தேடி போய் சாப்பிடுவோம். அதுபோல இந்த கிளிங்க என் வீட்டைத் தேடி வந்துடுறாங்க.

நாம நிறைய மரம் வளர்க்கணும் சார். நம்ம பாரம்பரியத்தை பாதுகாக்கணும் சார். நமக்கடுத்த தலைமுறை கிளிங்க, குருவிங்க, அணில் போன்றவற்றை பார்க்கணும்-னா மரத்தை வளர்க்கணும் சார். மரங்கள் வளர்த்தா தான், இவங்க கூடுகள் அதிகமாகும். இவங்க இனமும் அதிகமாகும். நம்ம குழந்தைகளுக்கும் நாம காட்ட முடியும்

இல்லனா காலப்போக்குல எதுவுமே நம்ம பசங்களுக்கு காட்ட முடியாது. நம்ம தலைமுறையே கஷ்டப்படும். நாமளும் நல்லா இருக்கணும், நம்ப சுற்றுச் சூழலும் நல்லா இருக்கணும்-னா மரங்களை வளர்த்தால் தான் உண்டு. ஒரு வீட்டுக்கு ரெண்டு மரமாவது வளர்க்கணும். இதைப் பண்ணோம்-னா பறவை இனமும், மனித இனமும் அழியாம நாம பாதுகாக்கலாம்" என்றார்.

-செந்தில் முருகன், சென்னை தெற்கு.

Comments