குழந்தைகளை அடிக்கடி தாக்கும் 5 நோய்கள், அற்புதமான கை வைத்தியங்கள், பலன் நிச்சயம்!

 

-MMH

பிறந்த குழந்தைகள் வளரும் போது, பொதுவாக ஜலதோஷம், இருமல், வயிற்றுப்போக்கு பிரச்சனைகளை தான் அதிகம் சந்திப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்துகிறது. குழந்தைகள் வளரும் போது வருடத்தில் இரண்டு முறைக்கு மேலாக இந்த பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். அதனால் தான் குழந்தைகள் பிறந்த வீட்டில் முன்னோர்கள் எச்சரிக்கையாகவே குறிப்பிட்ட இந்த பிரச்சனைக்கு சில கை வைத்தியங்களை முன்னெச்சரிக்கையாக செய்தும் வைப்பார்கள். பக்கவிளைவில்லாத இதை இப்போதும் நாம் செய்யலாம். அப்படியான விஷயங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

1) வயிற்றுப்போக்கு: 

பிறந்த குழந்தைக்கு தாய்ப்பாலுடன் திட உணவு தொடங்கும் போது அவர்கள் வயிற்றுப்போக்கை சந்திப்பார்கள். பல் முளைக்கும் போது, கீழே கிடக்கும் பொருள்களை வாயில் போட்டு கொள்ளும் போது என ஒவ்வொரு தருணங்களிலும் இந்த பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள்.

ஆறு மாத குழந்தைகள் வயிற்றுப்போக்கு பிரச்சனையை சந்திக்கும் போது செய்ய வேண்டியவை குறித்து தான் பார்க்க போகிறோம். மாதுளம்பழத்தின் தோலை காயவைத்து நிழலில் உலர்த்தி பொடித்து சலித்து கண்ணாடி பாட்டிலில் தேக்கி வையுங்கள். இது மூன்று மாதங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம். குழந்தைக்கு வயிற்றுப்போக்கு உண்டாகும் போது ஒரு சிட்டிகை தூளை எடுத்து தாய்ப்பாலில் குழைத்து நாக்கில் தடவலாம்.

முன்பெல்லாம் தேனில் குழைத்து குழந்தைக்கு தருவார்கள். ஆனால் இப்போது மருத்துவர்கள் குழந்தைகளுக்கு ஒரு வருடம் வரை தேன் சேர்க்க கூடாது என்று அறிவுறுத்துவதால் தாய்ப்பால் அல்லது வெந்நீரில் கலந்து நாக்கில் தடவிவிடலாம். குழந்தைக்கு பத்து மாதம் ஆன பிறகு ஜாதிபத்ரி பொடியை கலந்து கொடுக்கலாம்.


2) மலச்சிக்கல்: 


குழந்தை தாய்ப்பால் குடிக்கும் வரை மலச்சிக்கல் பிரச்சனையை எதிர்கொள்ள மாட்டார்கள். ஆனால் தாய்ப்பாலுக்கு பிறகு இணை உணவு எடுத்துகொள்ளும் போது மலச்சிக்கல் பிரச்சனையும் உடன் வரும். மலச்சிக்கல் பிரச்சனையின் ஆரம்ப கட்டத்தில் இதை தீர்க்க செய்யும் வைத்தியங்கள் எளிதில் கைகொடுக்கும். 

5 உலர் திராட்சைகளை எடுத்து நன்றாக நீரில் கழுவி 20 மில்லி தண்ணீரில் ஊறவைக்கவும். மறுநாள் காலை குழந்தைக்கு கொடுத்தால் மலச்சிக்கல் பிரச்சனை சரியாகக்கூடும். குழந்தைக்கு உலர் திராட்சை குளுமை என்று நினைத்தால் வெந்நீரில் ஊறவைத்து கொடுக்கலாம். 

தொடர்ந்து மூன்று நாட்கள் கொடுத்தால் மலச்சிக்கல் தீரும். எப்போதெல்லாம் மலச்சிக்கல் வருகிறதோ அப்போதெல்லாம் இதை தொடர்ந்து 3 நாட்கள் குடிக்க வைத்தால் மலச்சிக்கல் வராது.

3) அஜீரணக்கோளாறுகள்: 

தாய்ப்பால் குடிக்கும் போதே குழந்தைகள் பால் கக்கிவிடுவார்கள்.  குழந்தையின் செரிமான மண்டலம் சீராக வளர்ச்சி அடையாத நிலையில் குழந்தைக்கு கொடுக்கும் மென்மையான உணவுகளையும் அவர்கள் கக்கிவிடுவார்கள். 

இந்த அஜீரணக்கோளாறுகள் சரியாக ஜீரண மண்டலத்தை மேம்படுத்துவது சிறந்த வழி. குழந்தைகளுக்கு அஜீரணகோளாறு ஏற்படும் போது கிரைப் வாட்டர் கொடுப்பது வழக்கம். அப்போது அதனுடன் இஞ்சியை தோல் சீவி நறுக்கி இடித்து அதன் சாறு ஒரு சொட்டு கிரைப் வாட்டரில் சேர்த்துகொடுக்கலாம்.

ஆயுர்வேதத்தின் படி குழந்தைகளுக்கு அஜீரணக்கோளாறு வரும் போது இஞ்சி சாறு 3 அல்லது 4 துளியை தேனில் கலந்து குழைத்து கொடுக்க வேண்டும்.

4) சளி பிரச்சினை: 

குழந்தைக்கு சளி பிடித்தால் நெஞ்சு சளி இல்லாமல் பார்த்துகொள்ள வேண்டும். அதற்கு உள்ளுக்கும் வெளிக்கும் செய்யகூடிய வைத்தியங்களில் சிறந்தவை ஆடா தோடை இலை, வெற்றிலை.

ஆடாதோடா இலையை எடுத்து 3 இலைகளை இட்லி பாத்திரத்தில் போட்டு அவித்து எடுத்து மெல்லிய வெள்ளைத்துணியில் கட்டி சாறு பிழியவும். இதிலிருந்து வரும் 3 அல்லது 4 துளி சாறை எடுத்து தாய்ப்பால் சேர்த்து கலந்து கொடுக்கவும். தினமும் இரண்டு அல்லது மூன்று வேளை என மூன்று நாட்கள் கொடுக்கலாம்.

வெற்றிலை மீது நல்லென்ணெய் தடவி இலேசாக அனலில் காட்டி வெதுவெதுப்பான சூட்டில் குழ்ந்தையின் மார்பில் பற்றுபோல் ஒட்டி வைக்கலாம். இது மார்பு சளியை கரைத்து வெளியேற்றும்.

5) இருமல்: 

குழந்தைக்கு இருமல் இருக்கும் போது மூச்சுவிடவும் சிரமத்தை எதிர்கொள்வார்கள். இரவில் தூங்குவதும் சிரமமாக இருக்கும். இருமலால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இஞ்சிச்சாறும் தேனும் அருமருந்தாக இருக்கும். அதோடு இது நோய் எதிர்ப்பு சக்தியையும் தரக்கூடும்.

இருமல் இருக்கும் போது இஞ்சியை எடுத்து தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி வெள்ளைத்துணியில் கட்டி இடித்தால் சாறு அதிலேயே தேங்கிவிடும். பிறகு அந்த சாறை வடிகட்டி அதனுடன் தேன் கலந்து குழந்தையின் நாக்கில் தடவ வேண்டும்.

தினமும் மூன்று முறை கால் டீஸ்பூனில் நான்கில் ஒரு பங்கு என தடவி வந்தால் இருமல் படிப்படியாக குறையும். குழந்தைக்கு பயன்படுத்தும் தேன் சுத்தமானதாக இருக்க வேண்டும். இதனால் குழந்தையின் உடலுக்கு எதிர்ப்பு சக்தியும் கிடைக்கும்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

 -ராயல் ஹமீது.

Comments