பசு மாட்டுக்கும் அகத்திக்கீரைக்கும் அமாவாசைக்கும் என்ன சம்பந்தம்?? பார்க்கலாமா..
குடும்பத்தில் தொடர்ந்து வறுமை, செய்தொழிலில் நஷ்டம், குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவர் ஆரோக்யகுறைபாட்டால் பாதிக்கப்படுவது, திருமணத்தடை, குழந்தைப்பேறின்மை என்று தொடர்ந்து பல இன்னல்களை அனுபவிக்க நேரிட்டால் அவர்கள் பித்ரு தோஷத்தால் பாதிக்கப் பட்டிருக்கிறார்களா என்று முதலில் அறிய வேண்டும். குடும்பத்தில் முன்னோர்கள் இறந்த பிறகு அவர்களுக்கு உரிய திதியில் தர்ப்பணங்கள், வழிபாடுகள் செய்ய தவறினால் பித்ருலோகத்தில் பசி, தாகத்தால் அவர்கள் சாபம் இடுவார்கள். கோயில்களில் பரிகாரம் செய்தாலும் கூட பித்ரு தோஷத்தைப் போக்க முடியாது. மாறாக அமாவாசை, அவர்கள் இறந்த திதியில் தர்ப்பணம் செய்து அகத்திக் கீரையை பசுமாட்டுக்கு தானமாக அளித்தால் மனம் குளிர்ந்து வாழ்த்துவார்கள். பசுவில் எல்லா தெய்வங்களும் குடிகொண்டிருப்பதாக ஐதிகம்,.உயிரோடு இருக்கும் போது அவர்களுக்கு உணவளிக்க தவறிவிட்டவர்கள் கூட அந்தப் பாவத்தை போக்கிகொள்ள அமாவாசை தினத்தன்று பசுமாடுகளுக்கு அகத்திக் கீரை வழங்கலாம். அகத்திக் கீரை அறிந்தும் அறியாமலும் முற்பிறவியில் செய்த வினைகளிலிருந்து நம்மைக் காக்கும் என்பது ஐதிகம்.
பசுவுக்கு அகத்திக்கீரை கொடுக்கும் போது:
ஸர்வ காம துகே தேவி . ஸர்வ தீர்த்தாபிக்ஷேசினி
பாவனே ஸுரபி ஸ்ரேஷ்டே.தேவி துப்யம் நமோஸ்துதே
என்ற மந்திரத்தை சொல்லிக் கொடுக்க வேண்டும். எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்பவளே. எல்லா தீர்த்தங்களாலும் அபிஷேகம் செய்யப்படுபவளே.. மங்கல வடிவானவளே.. காமதேனுவே உன்னை வணங்குகிறேன் என்று சொல்லி அகத்திக்கீரையை தானம் செய்ய வேண்டும்.
நீண்ட வருடங்களாக முன்னோர்களுக்கு திதி, சிரார்த்தம் செய்யாமல் இருப்ப வர்கள் ஒவ்வொரு அமாவாசை அன்றும் முன்னோர்களை நினைத்து பசுவுக்கு அகத்திக்கீரையைத் தானமாக கொடுத்து பாவத்தை போக்கி கொள்ளலாம். இத னால் அறியாமல் செய்த பாவங்கள் நீங்கும். கொடிய பிரம்மஹத்தி தோஷமும் நீங்கும்.பித்ருக்கள் சாபம் நீங்கி அவர்களது ஆசி கிடைப்பதால் குடும்பத்தில் தடைபட்ட அனைத்து காரியங்களும் மகிழ்ச்சி கரமாக நடக்கும். நமது சந்ததியினர் தோஷங்கள் இன்றி ஆயுள்பலத்தோடு அனைத்து சம்பத்துகளும் பெற்று வாழ்வார்கள்.
எது எப்படியோ.. நம் முன்னோர்கள் பசி தாகமின்றி இருக்க வேண்டுமல்லவா.. இன்று அமாவாசை அதனால் அகத்திக்கீரையை பசுமாட்டுக்கு தானம் அளியுங்கள். உங்கள் முன்னோர்களின் ஆசியை தடையின்றி பெறுவீர்கள்.விஞ்ஞான முறையில் பார்த்தால் அகத்திக்கீரையில் 63 விதமான சத்துக்கள் உண்டாம். கசப்பு மிக்க கீரையை உண்ண முடியாதவர்கள் பசுமாட்டுக்கு தானம் அளித்தால் பசும் பாலில் அக்கீரைக்கு உண்டான அத்தனை சத்துக்களும் கிடைக்கிறதாம்.
-ஸ்டார் வெங்கட்.
Comments