காரைக்குடி நகராட்சியின் முன்பு குப்பை கொட்டும் போராட்டம்! மக்கள் மன்றத்தினர் கைது!

 

-MMH

காரைக்குடியில் வரலாற்றுச் சிறப்புமிக்க இடம் மகர்நோன்புப் பொட்டல். இங்கு காந்தியடிகள் முதல் பெரியார், காமராசர், கலைஞர், ஜெயலலிதா வரை அனைத்து அரசியல் தலைவர்களும் பேசிய  புகழ்பெற்ற பொதுக்கூட்ட திடலாக இருப்பதால், இந்த இடத்திற்கு காந்தி சதுக்கம் என்று அழைக்கப்படுகிறது. 

இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு இசைஞானி விருதும், நடிகர் விஜயகாந்காந்திற்கு புரட்சிக்கலைஞர் விருதும் இந்த மகர்நோன்பு பொட்டலில்தான் அளிக்கப்பட்டன. இந்த காந்தி திடல் இன்று குப்பைக் கிடங்காகக் காட்சியளிக்கிறது. 

இந்த இடம் மட்டுமன்றி காரைக்குடி முழுவதும் ஆங்காங்கே சாலை ஓரங்களில் குப்பைகள் குவித்து வைக்கப்பட்டு சுகாதாரக் கேடாகக் காட்சியளிக்கிறது. இதனைச் சுத்தம் செய்யக்கோரி தமிழக மக்கள் மன்றத்தினர் ஜனவரி 22 அன்று நகராட்சியில் புகார் அளித்தனர். ஆனாலும் கண்டுகொள்ளாத காரைக்குடி நிர்வாகத்திடம், பலமுறை அறிவுறுத்தியும் குப்பைகளைச் சுத்தம் செய்யாததால் இன்று மக்கள் மன்றத்தினர் ஒன்றுசேர்ந்து மகர்நோன்புப் பொட்டலில் குவித்து வைத்திருந்த குப்பைகளை அள்ளிச்சென்று காரைக்குடி நகராட்சி வாசலில் கொட்டி, முறறுகைப் போராட்டம் செய்தனர். 

இதனால் அங்கு வந்த காரைக்குடி காவல்துறை ஆய்வாளர் சுந்தரம் மகாலிங்கம் தலைமையிலான காவல்துறையினர், மக்கள் மன்றத் தலைவர் ச.மீ.ராசகுமார், கரு.ஆறுமுகம், சிவப்பட்டன், ஜெயராமன், முகம்மது மீரான் உள்ளிட்ட பலரைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இதுகுறித்து நகராட்சி ஆணையரை நாம் தொலைபேசியில் அழைத்துக் கேட்ட போது, 'பாதாளச் சாக்கடை தோண்டும் பணியின்போது அள்ளப்பட்ட மண்களை மட்டுமே அங்கு கொட்டி வைத்துள்ளோம். விரைவில், குடிநீர் வடிகால் வாரியத்தின் அந்த மண் குவியல்களை அப்புறப்படுத்த அறிவுறுத்தியுள்ளோம்' என்று கூறினார். 'வெகுவிரைவில் மகர்நோன்பு பொட்டல் முன்பு இருந்ததைப் போலவே பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்' என்றும் உறுதியளித்தார்.

-ராயல் ஹமீது.

Comments