காலையில் திருமணம்! மாலையில் மாரடைப்பில் உயிரிழந்த மணமகன்!

-MMH

             ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே காலையில் திருமணம் நடந்த நிலையில், மாலையில் புது மாப்பிள்ளை மாரடைப்பால் உயிரிழந்ததால் ஊரே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள இளஞ்செம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன். இவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு, வாழ்வாதாரம் தேடி திருச்சிக்குச் சென்று, அங்கேயே குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் தங்களது பூர்வீக கிராமமான இளஞ்செம்பூர் கிராமத்திற்கு வந்து, தனது மகனுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்ற நோக்கில் விக்னேஸ்வரனின் பெற்றோர், சொந்த ஊருக்கு வந்துள்ளனர். விக்னேஸ்வரனுக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணம் பேசி, பிப்ரவரி 24ஆம் தேதி அப்பகுதியிலுள்ள கோயிலில் திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றுள்ளது. இதையடுத்து மணமகள் வீட்டிற்கு விருந்திற்காக சென்ற இருவருக்கும் பால், பழம் சாப்பிட கொடுத்து உள்ளனர். இதையடுத்து மணமகன் விக்னேஸ்வரனுக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு உள்ளது.

பின்னர் பதறிப்போன மணமகள் குடும்பத்தினர், உடனடியாக மணமகன் விக்னேஸ்வரனை சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு விக்னேஸ்வரனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். இதையடுத்து மணமகன் விக்னேஸ்வரனை அவரது உறவினர்கள் சொந்த ஊருக்கு கொண்டு வந்து நல்லடக்கம் செய்தனர். திருமணம் முடிந்த அன்றே மணமகன் உயிரிழந்தது மணமக்கள் வீட்டாரையும், அப்பகுதி கிராம மக்களையும் மிகுந்த சோகத்திற்கு உள்ளாகியுள்ளது.

-பாரூக், சிவகங்கை.

Comments