சிங்கம்புணரி செயின்ட் ஜோசப் மகளிர் கல்லூரியில் தேசிய தொழுநோய் ஒழிப்பு தின விழிப்புணர்வு முகாம்!
சிங்கம்புணரி செயின்ட் ஜோசப் மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், அறிவுசார் நிகழ்வுகளும் அடிக்கடி நடத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக நேற்று, சிவகங்கை மாவட்ட மருத்துவ துணை இயக்குனர் மருத்துவர் சிவகாமி தலைமையில் தொழுநோய் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் தொழுநோயின் அறிகுறிகள், அவை உண்டாகும் விதம், அதைத் தடுக்கும் வழி முறைகள் ஆகியவை பற்றி மாணவிகளிடம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
தொழு நோயைப் பற்றி பொதுச்சமூகத்தில் வதந்தியாகவும், தவறாகவும் பரப்பப்பட்டிருக்கும் செய்திகள் எவ்வாறு தவறானவை என்பது தெளிவாக விவரிக்கப்பட்டது. தொழுநோய் ஒரு பரம்பரை நோய் அல்ல என்றும், இது ஒரு பாக்டீரியாவால் ஏற்படும் நோய் என்றும், தொழுநோயாளிகளிடம் அன்பும் பரிவும் காட்ட வேண்டும் என்றும் சிவகங்கை மாவட்ட தொழுநோய் ஒழிப்பு அலுவலர் மற்றும் மாவட்ட நல கல்வியாளர்,
திருப்பதி ராஜ் அற்புதமாக எடுத்துரைத்தார். உலகம் முழுதும் இருக்கும் தொழுநோயாளிகளின் 60 சதவீதம் பேர் இந்தியாவில்தான் உள்ளனர் என்றும், ஒட்டுமொத்த இந்தியாவையும் ஒப்பிடும்போது தமிழகத்தில் தொழுநோயாளிகள் மிகக் குறைவு என்றும் சான்றுகளுடன் விளக்கினார்.
பிரான்மலை ஆரம்ப சுகாதார நிலையத்தின் வட்டார மருத்துவ அலுவலர் நபிஷா பானு அவர்கள் பேசும்போது, தொழுநோயின் அறிகுறிகள் காணப்பட்டால் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்றும் இந்நோய் காற்றின் மூலம் பரவுகிறது என்றும் விரிவாக எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட மருத்துவ துணை இயக்குனர் சிவகாமி, வட்டார மருத்துவ அலுவலர் நபிஷா பானு, சிவகங்கை மாவட்ட தொழுநோய் ஒழிப்புத்துறை அலுவலர்கள் திருப்பதி ராஜ், சந்திரசேகரன், முத்துராமலிங்கம் பிரான்மலை மருத்துவ அலுவலர் முத்தமிழ் செல்வி, ஜெயராமன், தினகரன் மதியரசு, செயிண்ட் ஜோசப் மகளிர் கல்லூரி முதல்வர் முனைவர் அருள்சகோதரி மார்கரெட் பாஸ்டின், கல்லூரி என்.எஸ்.எஸ் ஒருங்கிணைப்பாளரும் கணிதத் துறை தலைவருமான உதவி பேராசிரியர் சுதா ஆகியோரும் கலந்து கொண்டனர். மாணவிகள் அனைவரும் மருத்துவர்களின் பேச்சுக்களை கவனமாக கேட்டு, தொழுநோய் சம்பந்தமான விழிப்புணர்வு பெற்றனர்.
-பாரூக், சிவகங்கை.
Comments