திருமணப் பரிசாக பெட்ரோல், சிலிண்டர், வெங்காயம்! குசும்புக்கார நண்பர்கள்!

-MMHசென்னையில் நடந்த திருமண விழா ஒன்றில், மணமக்களுக்கு பெட்ரோல், சிலிண்டர் மற்றும் சின்ன வெங்காயத்தை நண்பர்கள் பரிசாக வழங்கினர். நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மற்ற பொருட்களின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை நாடு முழுவதும் உயர்ந்து தினமும் புது உச்சத்தை தொடர்ந்து கடந்து வருகிறது. பல மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயை கடந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இது தொடர்பாக உருவாக்கப்பட்ட மீம்ஸ்களும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சிலிண்டர் விலையும் கடந்த சில நாட்களுக்கு முன் ₹.50 விலை உயர்த்தப்பட, மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். இதுதான் விலை உயர்ந்தது என்றால், சின்ன வெங்காயத்தின் விலை தாறுமாறாக எகிறியிருக்கிறது. ₹.100க்கு கீழ் விற்ற சின்ன வெங்காயம், இப்போது ₹.180க்கு விற்கிறது. அது கூடப் பரவாயில்லை! காய்கறி வாங்கினால் இலவசமாக கிடைக்கும் கறிவேப்பிலை கூட, கிலோ ₹.100க்கு விற்கும் நிலை ஏற்பட்டு விட்டது. தேர்தல் நேரத்தில் இப்படி விலைவாசி திடீரென உயர, அது தேர்தலில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சென்னையில் நடந்த திருமண விழா ஒன்றில், மணமக்களின் நண்பர்கள் சிலர், தற்போது விலை உயர்ந்து காணப்படும் பெட்ரோல், சிலிண்டர் மற்றும் சின்ன வெங்காயத்தை மணமக்களுக்குபரிசாக அளித்துள்ளனர். இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட, அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. பயனுள்ள பொருட்களை திருமண அன்பளிப்பாக வழங்கிய நண்பர்களை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-பாரூக்.

Comments