பள்ளி மாணவனை வேட்டையாடிய ஃப்ரீ பயர் விளையாட்டு! தூக்கில் தொங்கிய ஒரே மகன்! விபரீதத்திற்கு தடை எப்போது?

-MMH

     திருவள்ளூர் அருகே ஃப்ரீ ஃபயர் கேமிற்கு அடிமையான சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த என்ஜிஓ நகரைச் சேர்ந்தவர் பாபு. இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மகன் ராகேஷ். ராகேஷ் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் ஆன்லைன் வகுப்பிற்காக ஆண்டிராய்டு போன் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளனர். அந்த போனில் ஃப்ரீ ஃபயர் கேம் செயலியை பதிவிறக்கம் செய்துகொண்டு அவ்வப்போது சிறுவன் விளையாடி வந்துள்ளான்.


ராகேஷ் படிப்பதற்காக வீட்டின் முதல் மாடியில் தனியாக அறை ஒதுக்கப்பட்டிருந்ததால், அங்கு சென்று ஆன்லைன் வகுப்புகளில் ஈடுபட்டு வந்த சிறுவன், வெகு நேரங்களில் ஃப்ரீ ஃபயர் விளையாடி வருவதை வாடிக்கையாக வைத்து வந்துள்ளான். அதிக நேரம் கேமை விளையாடி வந்தால் பாய்ண்டுகள் அதிகம் சேரும் என்ற எண்ணத்தில் இருந்து வந்த ராகேஷால் நினைத்த அளவில் ஆர்பி என்று கூறப்படும் பாய்ண்டுகள் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த ராகேஷ், நேற்று ஹோம் ஒர்க் செய்வதாகக் கூறி தனது அறைக்குச் சென்றுள்ளான். நீண்ட நேரமாகியும் மகன் வெளியில் வராததால், வீட்டிலிருந்தவர்கள் கதவை தட்டிப் பார்த்தனர். அப்போது, கதவு உள்புறமாக பூட்டிக் கிடந்த நிலையில், மாணவனிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனால் சந்தேமடைந்த பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.

அப்போது, ராகேஷ் தனது அம்மாவின் சேலையில் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஒரே மகன் பிணமாக தொங்குவதை கண்டு பெற்றோர் அலறி துடிக்கவே அக்கம் பக்கத்தினர் அங்கு கூடினர். பின்னர் சம்பவம் குறித்து பொன்னேரி காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார் மாணவனின் சடலத்தைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அண்மையில் இதேபோல கோவை சிறுவன் ஒருவன் பப்ஜி கேமிற்கு அடிமையாகி பள்ளிக்குச் செல்வதையும் நிறுத்தியுள்ளான். அதனால், மனநிலையும் மோசமாகி கோவையில் உள்ள மனநல மருத்துவமனையில் கடந்த இரண்டு மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தான். சிகிச்சை முடிந்து வீட்டுக்கு திரும்பிய சிறுவன் தனி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இளைஞர்களின் வாழ்க்கையை சீரழித்து உயிர் பலி வாங்கிய ஆன் லைன் ரம்மி சூதாட்டத்திற்கு இணையாக, ப்ரீ பயர் ஆன் லைன் விளையாட்டும் மாணவர்களின் மனதையும் உடல் நலத்தையும் கெடுத்து வந்த நிலையில் உயிர்பலி வாங்க தொடங்கி இருப்பதால், அதற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்பதே பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது.

-பாரூக்.

Comments