குமரி அதிமுக பிரமுகர் மீது மோசடிப் புகார்! வேலை வாங்கித் தராமல் மோசடி!

 

-MMH

       ரசு மருத்துவமனையில் மருந்தாளுநர் பணி வாங்கித் தருவதாகக் கூறி, ஆறு லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, அதிமுகவின் அனைத்துலக எம்ஜிஆர் மன்றச் செயலாளர் தமிழ் மகன் உசேன் மீது நாகர்கோவில் மாவட்டக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. தக்கலைப் பகுதியைச் சேர்ந்தவர் எம்.அப்துல் ஹமீது (53). இவர் நாகர்கோவிலில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில், “கடந்த ஏழு மாதங்களுக்கு முன் அரசு மருத்துவமனையில் மருந்தாளுநர் பணிகளுக்கு ஆள்கள் தேர்வு செய்யப்போவதாக வந்த பத்திரிகை விளம்பரத்தைப் பார்த்து விண்ணப்பித்தோம். இதற்காக அதிமுகவின் அனைத்துலக எம்ஜிஆர் மன்றச் செயலாளர் தமிழ் மகன் உசேனைச் சந்தித்து, இந்த வேலையை சுகாதாரத் துறை அமைச்சர் வழியாக வாங்கித் தருமாறு கேட்டேன்.

அதற்கு அவர், ‘வேலை அவசியம் வாங்கித் தருகிறேன். அதற்கு ஏழு லட்சம் ரூபாய் வேண்டும். ஆறு லட்சம் ரூபாய் முதலில் தர வேண்டும், வேலை கிடைத்ததும், மீதம் ஒரு லட்சம் ரூபாய் தர வேண்டும்’ எனக் கூறினார். அதன்படி ஆறு லட்சம் ரூபாய் அவரிடம் கொண்டு கொடுத்தேன். ஆனால், ஏழு மாதங்களாகியும் இதுவரை வேலை வாங்கித் தரவில்லை. தற்போது அந்தப் பணியிடங்கள் அரசுத் தரப்பில் நிரப்பப்பட்டுவிட்டது.

எனவே, வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஆறு லட்சம் ரூபாய் வாங்கி ஏமாற்றிய அதிமுகவின் அனைத்துலக எம்ஜிஆர் மன்றச் செயலாளர் தமிழ் மகன் உசேன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். ஆளும் கட்சியைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதி மீது பாதிக்கப்பட்ட நபர் கொடுத்துள்ள மோசடி புகார், குமரி அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-பாரூக்.

Comments