கோவை-ராமேஸ்வரம் நேரடி ரயில் நிரந்தரமாக நிறுத்தம்!!

     -MMH

கோவை-ராமேஸ்வரம் நேரடி ரயில் நிரந்தரமாக நிறுத்தம்: கோவையை புறக்கணிக்கும் மத்திய ரயில்வே துறை! பாஜக அரசின் பழிவாங்கும் போக்கு!!

கோவையில் இருந்து ராமேஸ்வரம் செல்ல பொள்ளாச்சி வழியாக, தினமும் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டது. மீட்டர் கேஜ் பாதையாக இருந்த காலத்திலேயே தினமும் ஓடிய அந்த ரயில் இடையே மதுரை - ராமேஸ்வரம் அகல ரயில் பாதைக்காக, அந்த ரயில் நிறுத்தப்பட்டது. மேலும் பொள்ளாச்சி - திண்டுக்கல் வரை அகல ரயில் பாதை அமைக்கப்பட்டது.

கடந்த 2007ம் ஆண்டு திண்டுக்கல்-பொள்ளாச்சி- போத்தனூர்/ பொள்ளாச்சி – பாலக்காடு அகல ரயில் பாதைக்கு ரயில்வே அமைச்சகம் அனுமதி அளித்தது. இந்த திட்டமானது பலகட்டமாக பிரித்து பணிகள் நடைபெற்றது. திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சி – பாலக்காடு பணிகள் முடிவடைந்த நிலையில் பொள்ளாச்சி போத்தனூர் வரையிலான 40 கிலோ மீட்டர் தூர பணிகள் மட்டும் நடைபெற்று வந்தது. சுமார் 340 கோடி மதிப்பீட்டில் போத்தனூரில் இருந்து பொள்ளாச்சி வரையிலும் அகல பாதை பணி ஒரு வழியாக 2017ல் முடிக்கப்பட்டு விட்டது.

இப்பணி முடிந்து, நான்கு ஆண்டுகளாகியும், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸை மீண்டும் இயக்கவில்லை.

இந்த ரயில் இயக்கப்பட்டால், கோவை மற்றும் மதுரை பெருநகரங்களுக்கு நேரடி இணைப்பு கிடைக்கும் என, பலரும் ரயில்வே நிர்வாகத்தை வலியுறுத்தி வந்தனர்.

இதைத் தொடர்ந்து, கோவை - பொள்ளாச்சி -பழநி -திண்டுக்கல் - மதுரை-ராமேஸ்வரம் சென்று வரும் வகையில், தினமும் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கலாம் என, தெற்கு ரயில்வே தலைமையகத்துக்கு, சேலம் கோட்டத்தில் இருந்து பரிந்துரைக்கப்பட்டது.

ஆனால், அதற்கு மாறாக, மங்களூருவில் இருந்து ராமேஸ்வரத்துக்கு இயக்கலாம். அதுவும் வாரம் இருமுறை மட்டுமே.

மதுரை - திண்டுக்கல் - பழநி - பொள்ளாச்சி - போத்தனூர் - பாலக்காடு வழியாக கோவையை புறக்கணித்துவிட்டு இயக்கலாம் என, வாரியத்துக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது கோவை மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் மீண்டும் இயக்கப்பட்டால், மேட்டுப்பாளையம், மருதமலை, ஆனைமலை, பழனி, மதுரை ராமேஸ்வரம் மற்றும் ஏர்வாடி ஆகிய பகுதிகளுக்கு ஆன்மீக சுற்றுலா செல்லும் வகையிலும் அமையும். இதுதவிர, வர்த்தக நிறுவனத்தினர், தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பணி நிமித்தமாக ரெகுலராக பயன்படுத்துவர்.

ராமேஸ்வரத்தில் இருந்து மீன், கருவாடு, மதுரையில் இருந்து பூக்கள், ஒட்டன்சத்திரம் காய்கறிகள் பொள்ளாச்சி சந்தைக்கு கொண்டு செல்லலாம்.

கோவையில் உற்பத்தி செய்யபடும் பம்ப் செட், கிரைண்டர் மற்றும் ஜவுளி பொருட்கள், நீலகிரி மலை காய்கறிகளை மேட்டுப்பாளையம் வழியாக கொண்டு வந்து, ராமேஸ்வரம் வரையிலான நகரங்களுக்கு எடுத்துச் செல்ல போக்குவரத்து வழித்தடமாக அமையும்.

சரக்குகள் கொண்டு செல்லவும், பயணிகள் பயணிக்கவும் ஏதுவாக இருப்பதால், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் இயக்கினால், ரயில்வே துறைக்கு நல்ல வருவாய் கிடைக்கும் என்பதால், கோவை மக்களின் கோரிக்கையை ரயில்வே பரிசீலித்து, மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.

கொங்கு மண்டலத்தை சார்ந்த முதல்வரும் தென் மண்டலத்தை சார்ந்த துணை முதல்வரும் ஆட்சியில் இருந்தும் தங்கள் கோரிக்கை புறக்கணிக்கப்படுவது குறித்து இரண்டு மண்டலத்து மக்களும் குறிப்பாக இராமநாதபுரம் - கோவை மாவட்ட மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ஹனீப்,தொண்டாமுத்தூர்.

Comments