இதோ இன்னுமோர் புது வரி! மாதச் சம்பளம் வாங்குபவரா நீங்க ? அப்ப இதைப் படியுங்க முதல்ல.....!
ஓர் ஆண்டில் வருங்கால வைப்பு நிதிக்கணக்கில் 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் பங்களிப்பு செய்யப்பட்டிருந்தால், அதற்கு வரி விதிக்கப்படும்..! ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPFO) என்பது மிகச் சிறந்த சேமிப்புத் திட்டமாக சம்பளதாரர்கள் மத்தியில் பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஊழியர்களின் ஓய்வுகாலத்திற்கு ஏற்ற ஒரு திட்டமாகவும் இது இருந்து வருகிறது. ஏனெனில், ஒரு ஊழியரின் வருங்கால நலன் கருதி, ஊழியரும், நிறுவனமும் கணிசமான தொகையை, இந்த வருங்கால வைப்பு நிதித் (PF) திட்டத்தில் பங்களிப்பு செய்கின்றனர். இந்த திட்டம் பலரையும் கவர முக்கிய காரணம் அவர்களுக்கு இந்த சேமிப்பு திட்டத்தில் வரிச்சலுகை உண்டு என்பதே.
ஆனால், கடந்த பிப்ரவரி 1 அன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் 2021-யில் (Budget 2021-22) பழைய விதிமுறைக்கு ஒரு முற்றுபுள்ளி வைக்கபட்டுள்ளது. அதில், ஒரு புதிய திருத்தத்தினைக் கொண்டு வந்துள்ளது. அதன் படி ஒரு ஆண்டில் ஒரு ஊழியரின் வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் பங்களிப்பு செய்யப்பட்டிருந்தால், அதற்கு வரி விதிக்கப்படும்.
அரசு (Govt) இந்த வரி விதிப்பின் மூலம் அதிக வருமானம் உடையவர்களுக்கு வரிச் சலுகைகள் கிடைப்பதைக் கட்டுப்படுத்துகிறது என்றாலும், பலரும் இத்திட்டத்தில் வட்டி விகிதம் அதிகம் என்பதால் சேமிக்க ஆர்வத்துடன் உள்ளனர். அதோடு வரிச் சலுகையும் இருந்ததால் நல்ல முதலீட்டு திட்டமாகவும், சிறந்த சேமிப்பாகவும் பார்க்கப்பட்டது. இந்நிலையில் அரசின் இந்த முடிவால் சேமிப்புகள் குறையலாம்.
இது ஊழியர்கள், அவர்களின் பிற்காலத்தில் பெறவிருக்கும் ஓய்வூதியத்திற்கு (Employees Provident Fund) பாதிப்பினையே ஏற்படுத்தும். ஏனெனில், வரி செலுத்த வேண்டியுள்ளதால், சேமிப்புகள் குறையும். அப்படியே சேமித்தாலும் அதிகப்படியான வரி செலுத்த வேண்டியிருக்கும். எப்படி இருந்தாலும், ஓய்வூகாலத்தில் கிடைக்கும் தொகை கணிசமாகக் குறையும்.
ஓய்வூதியத் தொகை அதிகரிக்க அதிகரிக்க, PF வருமானமும் அதிகரிக்கும். இதனால், நாம் செலுத்த வேண்டிய வரி விகிதமும் அதிகரிக்கும். எனவே, இதனைக் கருத்தில் கொண்டு ஊழியர்கள் தங்களது முதலீட்டுத் திட்டங்களை மாற்ற முற்படலாம். இதே போல யூலிப் திட்டத்திற்கும் வருடத்திற்கு 2.5 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக செய்யப்படும் முதலீட்டிற்கு மூலதன ஆதாய வரி உண்டு. பங்குகள் கடன் மற்றும் பணச் சந்தையில் முதலீடு செய்யப்படும் இத்திட்டத்தில் செலுத்தப்படும் பிரீமியம், 2.5 லட்சத்தினைத் தாண்டினால் வரி செலுத்த வேண்டியிருக்கும். ஆக HNI வாடிக்கையாளர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அரசின் இந்தத் திட்டம் ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. இது அதிக சம்பளம் வாங்குவோருக்கு பெரியளவில் பாதிப்பினை ஏற்படுத்தலாம். அதாவது மாதத்திற்கு 20,833 ரூபாய்க்கு மேல் PF செலுத்துபவர்கள் இதனால் பாதிப்படைவார்கள். ஏனெனில் ஊழியரின் பங்களிப்பு ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாயை விட அதிகமாக இருக்கும். அதாவது 1,73,608 ரூபாய்க்கு மேல் அடிப்படை மாத சம்பளம் உள்ள அனைத்து நபர்களுக்கும் ஒரு வருடத்தில் 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் EPF பங்களிப்பு இருக்கும், எனவே இனி அவர்கள் அந்தக் கூடுதல் தொகையில் சம்பாதித்த வட்டிக்கு வரி செலுத்துவார்கள்.
-Ln. இந்திராதேவி முருகேசன், சோலை. ஜெய்க்குமார்.
Comments