சிங்கம்புணரி அருகே இருசக்கர வாகனங்கள் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி!

 

-MMH

      கொட்டாம்பட்டியை அடுத்த அய்யாபட்டியைச் சேர்ந்த அஷ்ரப் அலி என்பவர் தனது மனைவியுடன் கிருங்காக்கோட்டையிலிருந்து சிங்கம்புணரி நோக்கி நேற்று இரவு வந்து கொண்டிருந்தார். அப்போது அணைக்கரைப்பட்டி அருகே அலைபேசியில் பேசுவதற்காக சாலையோரத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு பேசிக்கொண்டிருந்தார்.

அதே நேரத்தில் ஒடுவன்பட்டியைச் சேர்ந்த கருப்பையா மகன் திருநாவுக்கரசு என்பவர் (55) சிங்கம்புணரியிலிருந்து கிருங்காக்கோட்டை நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். திருநாவுக்கரசு மது அருந்தி இருந்ததாகக் கூறப்படுகிறது. 


அதனால் வாகனம் ஒரு ஒழுங்கற்ற நிலையில் செலுத்தப்பட்டு அஷ்ரப் அலியின் மீது மோதி திருநாவுக்கரசு வந்த வாகனம் விபத்துக்குள்ளானது. அதில் கீழே விழுந்த திருநாவுக்கரசு தலைக்கவசம் அணியாத நிலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிங்கம்புணரி காவல்துறையினர் திருநாவுக்கரசின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப் பதியப்பட்டு சிங்கம்புணரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

-ராயல் ஹமீது, சிங்கம்புணரி.

Comments