குடிநீருக்கு பஞ்சமில்லை! ஆழியாறு அணை நீர்மட்டம் தொடர் சரிவு! கோடை காலத்தை சமாளிக்க கையிருப்பு?

-MMH 

     ஆனைமலை-ஆழியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழையில்லாததால், அணையின் நீர் மட்டம் 98 அடிக்கு சரிந்துள்ளது. ஆனாலும், அணையில் இருக்கும் நீர் இருப்பை கொண்டு, கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாத வகையில் சமாளிக்க முடியும், என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் .பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு அணையில், சேமிக்கப்படும் நீரை பயன்படுத்தி, பழைய, புதிய ஆயக்கட்டு, கேரளா நீர் பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்படுகிறது.

பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில், 39 ஊராட்சிகள், தெற்கில் 26 ஊராட்சிகள், ஆனைமலையில், 19 ஊராட்சிகள், கிணத்துக்கடவில், 34 ஊராட்சிகள், ஆழியாறு குடிநீரால் பயன்பெறுகின்றன. வேட்டைக்காரன்புதுார், ஆனைமலை, கோட்டூர், சூளேஸ்வரன்பட்டி, ஜமீன்ஊத்துக்குளி பேரூராட்சிகளுக்கான குடிநீர் திட்டங்களும், சமத்துார் பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளுக்கான, கம்பாலபட்டி குடிநீர் திட்டமும் உள்ளன.அதேபோன்று, பொள்ளாச்சி நகராட்சிக்கான குடிநீர் திட்டம், கிணத்துக்கடவு பேரூராட்சி, கோவை மாநகராட்சிக்குட்பட்ட குறிச்சி, குனியமுத்துார் பகுதிகள் என, மொத்தம், 300க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு ஆழியாறு அணையே முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது.

இந்நிலையில், ஆழியாறு அணையில் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்துள்ளது. இதன் காரணமாக, ஜன., துவக்கம் முதல் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து சரிந்து வருகிறது. பிப்., துவக்கத்தில் அணையின் நீர் மட்டம் மொத்தமுள்ள, 120 அடியில், 110 அடியாக இருந்தது. மெல்ல மெல்ல நீர் மட்டம் சரிந்து, நேற்று முன்தினம், 99.40 அடியாக இருந்தது. நேற்று காலை நிலவரப்படி, 98.50 அடிக்கு நீர் மட்டம் இருந்தது. வினாடிக்கு, 192 கனஅடி நீர் வரத்தும், 818 கனஅடி வெளியேற்றம் இருந்தது.ஆண்டுதோறும் நீர் மட்டம் வெகுவாக குறையும் நேரத்தில், பல்வேறு பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை பிரச்னை ஏற்பட்டு, மக்கள் குடிநீருக்காக அலைமோதுவதுடன், போராட்டங்கள் நடப்பது வழக்கம்.ஆனால், இந்தாண்டு அணையில் நீர் மட்டம் சரிந்தாலும், கோடை காலத்துக்கு போதிய அளவு நீர் உள்ளதென, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர். இதனால், கோடையில் குடிநீர் பஞ்சம் ஏற்படாது என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

-கிரி.

Comments