பீலா ராஜேஷ் IASன் கணவர் ராஜேஷ் தாஸ் IPS மீது பாலியல் புகார்! கட்டாயக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

 

-MMH

      முதல்வர் பாதுகாப்புப் பணியின்போது பெண் ஐபிஎஸ் அதிகாரியை பாலியல் தொந்தரவு செய்த சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் அதிரடியாக மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்தப் புகார் குறித்து விசாரணை நடத்த தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், பெண் எஸ்பி துன்புறுத்தப்பட்டது குறித்த மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை சுற்றுப்பயணம் செய்தார். அவரது பாதுகாப்புப் பணிக்கு சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் சென்றிருந்தார். முதல்வர் விழா முடிந்ததும், பாதுகாப்பு பணிக்கு சென்ற சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், சென்னைக்கு காரில் திரும்பினார். அப்போது, திருச்சியில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் முதல்வரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் எஸ்பியின் மாவட்டம் வழியாக சென்றார். தன்னுடைய மாவட்டம் வழியாக சிறப்பு டிஜிபி செல்வதால் மரியாதை நிமித்தமாக மாவட்ட எல்லையில் நின்று அவர் வரவேற்றுள்ளார்.

அப்போது, பெண் ஐபிஎஸ் அதிகாரியை பார்த்ததும், முக்கியமான விஷயமாக பேச வேண்டும் என காரில் ஏறும்படி கூறியுள்ளார். காரில் ஏறியதும், தனது கார் டிரைவரை பார்த்து ராஜேஷ் தாஸ் முறைத்துள்ளார். இதனால் பயந்துபோன கார் டிரைவர், காரிலிருந்து இறங்கியுள்ளார். அப்போது ராஜேஷ் தாஸ், பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத பெண் ஐபிஎஸ் அதிகாரி, கோபத்தில் ராஜேஷ் தாசை திட்டியுள்ளார். பின்னர் காரில் இருந்து இறங்கி, நேராக தனது காரில் ஏறி அலுவலகம் சென்று விட்டார்.

தனக்கு நடந்த அவமானம் குறித்து உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், டிஜிபி திரிபாதி ஆகியோரிடம் புகார் செய்துள்ளார். பெண் ஐபிஎஸ் அதிகாரி புகார் செய்த தகவல் அறிந்ததும் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் பதறிப்போனார். உடனே அவரை சமாதானப்படுத்த செல்போனில் தொடர்புகொண்டார். ஆனால் அவர் போனை எடுக்கவே இல்லை. இதனால் தனது அலுவலக போன் மூலமாகவும் உதவியாளர் போனிலும் தொடர்புகொள்ள முயற்சித்தார். ஆனால் பெண் ஐபிஎஸ் அதிகாரி சட்டை செய்யவே இல்லை. இதனால் பெண் அதிகாரியின் அலுவலகத்தில் இருக்கும் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டரை பிடித்தார் ராஜேஷ் தாஸ். ‘என்ன செய்வாயோ தெரியாது. எப்படியாவது அந்தம்மாவை சரிக்கட்டி என்னைப் பற்றி புகார் செய்வதை நிறுத்த வேண்டும்’ என கூறியுள்ளார்.

இதனால் அந்த இன்ஸ்பெக்டர் நேராக பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் சென்றார். ‘‘இதெல்லாம் சாதாரணமா நடக்கிற விஷயம்.. பெரிசு படுத்தாதீங்க.. புகார் அது இதுன்னு போனா உங்களுக்குதான் பிரச்னை வரும். அவரு டிஜிபி. செல்வாக்கா இருக்கிறவரு.. அவரை பகைச்சுட்டு எதுவும் பண்ண முடியாது. அதனால கம்ப்ளைன்ட் எதுவும் பண்ண வேண்டாம்.. உங்க நல்லதுக்குத்தான் சொல்றேன்..’’ என சமாதானப்படுத்துவது போல மிரட்டிப் பார்த்தார். ஆனால் இதையெல்லாம் பெண் ஐபிஎஸ் அதிகாரி கண்டுகொள்ளவில்லை. சிறப்பு டிஜிபிக்கு உதவுவதற்காக தன்னை வந்து மிரட்டிய அந்த இன்ஸ்பெக்டர் பெயரையும் புகாரில் சேர்த்தார். இதை தொடர்ந்து நேரில் புகார் தெரிவிப்பதற்காக கடந்த திங்கட்கிழமை (22ம் தேதி) சென்னைக்கு காரில் வந்துள்ளார்.

இந்தத் தகவல் எப்படியோ சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாசுக்கு தெரியவந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் திணறிய ராஜேஷ் தாஸ், தனக்கு வேண்டிய செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி கண்ணனிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார். பெண் ஐபிஎஸ் அதிகாரி சென்னைக்கு வந்து கொண்டிருப்பதாகவும், அவரை மறித்து என்னிடம் பேச வையுங்கள். அதன்பின்னர், நான் அவரை சமாதானப்படுத்தி விடுகிறேன் என்றும் கூறியுள்ளார். இதனால், செங்கல்பட்டு சாலையில் குற்றவாளியை கைது செய்வதுபோல அதிரடிப்படையுடன் சென்று பெண் ஐபிஎஸ் அதிகாரியை மறித்துள்ளார்.

நீங்கள் உடனடியாக சிறப்பு டிஜிபியிடம் பேசுங்கள். பேசினால் மட்டுமே இங்கிருந்து செல்ல அனுமதிக்க முடியும். இல்லாவிட்டால் அனுமதிக்க முடியாது என்றும் கூறியுள்ளார். நான் ஒரு எஸ்பி. அதுவும் ஐபிஎஸ் அதிகாரி என்று கூறியுள்ளார். நானும் எஸ்பிதான். அதுவும் இந்த மாவட்ட எஸ்பி. என்னை மீறி நீங்கள், ஒரு அடி கூட செல்ல முடியாது. அவரிடம் பேசினால் மட்டுமே அனுமதிக்க முடியும் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். ஒரு குற்றவாளியைப்போல என்னை நடத்துகிறீர்கள். நான் கொடுக்கும் புகாரில் உங்களையும் சேர்த்து டிஜிபியிடம் கொடுக்க வேண்டியது இருக்கும் என்று பெண் ஐபிஎஸ் எச்சரித்துள்ளார்.

ஆனால், எஸ்பி கண்ணனோ, எனக்கு டிஜிபி எல்லாம் தெரியாது. சிறப்பு டிஜிபிதான் சட்டம் ஒழுங்கை கவனிக்கிறார். அவர் சொல்வதுதான் எனக்கு உத்தரவு. அதைத்தான் நான் நிறைவேற்ற முடியும் என்று கூறியுள்ளார். பின்னர் தன்னுடைய செல்போனில் இருந்து ராஜேஷ்தாசுக்கு போன் செய்து, பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் கொடுத்துள்ளார். அப்போது பெண் அதிகாரியை மிரட்டியதாகவும் பின்னர் சமாதானப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து, ஒரு வழியாக கண்ணனை சமாளித்து விட்டு சென்னை வந்து நேரடியாக டிஜிபி திரிபாதி, உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் ஆகியோரை சந்தித்து புகார் மனு கொடுத்துள்ளார் பெண் ஐபிஎஸ் அதிகாரி.

இந்த விவகாரம் தற்போது வெளியாகி போலீஸ் வட்டாரத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, தமிழக உள்துறை செயலாளர் பிரபாகர், தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக உள்ள ராஜேஷ் தாசிடம் விசாரணை நடத்த 6 பேர் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளார்.

அவர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது பெண் எஸ்பி பாலியல் தொந்தரவு புகார் அளித்துள்ளார். அதன்படி விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

அந்த விசாரணைக் குழுவுக்கு தலைவராக திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமை செயலாளராக உள்ள ஜெயஸ்ரீரகுநந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். விசாரணை குழு உறுப்பினர்களாக தலைமையிட கூடுதல் டிஜிபி சீமா அகர்வால், சென்னை நிர்வாக பிரிவு ஐஜி அருண், காஞ்சிபுரம் டிஐஜி சாமுண்டீஸ்வரி, டிஜிபி அலுவலகம் தலைமை நிர்வாக அதிகாரி வி.கே.ரமேஷ் பாபு, சர்வதேச நீதி மையத்தின் திட்ட மேலாண் அதிகாரி லொரேட்டா ஜோனா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். பணியிடத்தில் பெண்களை பாலியல் துன்புறுத்தல் சட்டம் (மத்திய சட்டம் 14 முதல் 2003 வரை) விதிகளின்படி இந்தக் குழு தேவையான கூடுதல் நடவடிக்கைகளை எடுக்கும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று மாலை சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் அதிரடியாக மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதில், லஞ்ச ஒழிப்புத்துறையில் ஏடிஜிபியாக உள்ள ஜெயந்த் முரளி, சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவையும், உள்துறைச் செயலாளர் பிறப்பித்துள்ளார். இதேபோல, லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றிய பெண் போலீஸ் அதிகாரியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஒரு ஐஜி மீது தமிழக அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. பணிமாற்றமும் செய்யவில்லை. புகார் கொடுத்த பெண் அதிகாரிதான் மாற்றப்பட்டார்.

ஆனால், தற்போது தேர்தல் நேரம் என்பதால், ராஜேஷ் தாஸ் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். அதேநேரத்தில், லஞ்ச ஒழிப்பு உயர் அதிகாரி மீதான புகாரிலும் ஏடிஜிபி சீமா அகர்வால் தலைமையிலான குழு விசாரணை நடத்தியது. இந்த விசாரணை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதேபோல, இந்த புகார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படாமல் விடப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையில், சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு உதவி செய்வதற்காக பெண் ஐபிஎஸ் அதிகாரியை மிரட்டிய இன்ஸ்பெக்டர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இதேபோல எஸ்.பி. கண்ணன் மீதான புகாரிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

தமிழக போலீஸ் என்றாலே டெல்லியில் தவறாக பார்க்கிறார்கள்!

ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் சார்பில் உயர் போலீஸ் அதிகாரிகள் கொண்ட ஒரு வாட்ஸ் அப் குரூப் இயங்கி வருகிறது. இந்தக் குழுவில் தமிழகத்தில் உள்ள அனைத்து உயர் போலீஸ் அதிகாரிகளும் உள்ளனர். இந்த குரூப்பில், பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு இழைக்கப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு குறித்து பலரும் தங்களது குற்றச்சாட்டுகளை கடுமையாக எடுத்து வைத்தனர். அதில், லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றும் பெண் ஐபிஎஸ் அதிகாரி பதிவிடும்போது, ‘‘ஐபிஎஸ் சங்கத்தால் எந்த பயனும் இல்லை. பிறந்த நாள் வாழ்த்து  மட்டும்தான் இந்த குரூப்பில் போடுகிறீர்கள். பெண் அதிகாரியை பாலியல் தொந்தரவு செய்த அதிகாரியை இந்த குரூப்பில் உள்ள மற்ற அதிகாரிகள் கண்டிக்கவில்லை’’ என்று முதல் முறையாக பதிவிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து பெண் அதிகாரிகளும், ஆண் அதிகாரிகளும் கடும் குற்றச்சாட்டுக்களை தெரிவித்தனர்.

ஒரு அதிகாரி கூறும்போது, ‘‘5 பெண் அதிகாரிகள் உள்துறைச் செயலாளரிடம் புகார் செய்ய உள்ளனர்’’ என்றார். மற்றொரு பெண் அதிகாரியோ, ‘‘எனக்கு இந்த துறையில் வேலை செய்யவே அவமானமாக உள்ளது. இந்த அதிகாரியால் மட்டுமல்ல, மற்ற அதிகாரிகள் அதை தட்டிக் கேட்காமல் சும்மா இருப்பதுதான் அசிங்கமாக உள்ளது’’ என்றார். மற்றொரு ஏடிஜிபியோ, ‘‘இந்த மாதிரி ஒரு சிலர் நடந்து கொள்வதால், தமிழக காவல்துறைக்கே கெட்ட பெயர் வருகிறது. போலீஸ் துறையில் வேலியே பயிரை மேய்கிறது’’ என்றார். சென்னையைச் சேர்ந்த கூடுதல் கமிஷனர் ஒருவர் கூறும்போது, ‘‘இப்போது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்னு சொல்கிறார்கள். சட்டப்படி நடவடிக்கை என்பது நமக்கு தெரிந்தவரை எப்ஐஆர் போடுவதுதான். இந்தப் புகார் மீது எப்ஐஆர் பதிவு செய்தாச்சா? ஏன் இதுவரை எப்ஐஆர் போடவில்லை. இந்த விவகாரத்துல யார் எப்ஐஆர் போடுவா?’’ என்று கேள்விகளை எழுப்பியுள்ளார்.

அதற்கு மற்றொரு அதிகாரி, ‘‘பெண் ஐபிஎஸ் அதிகாரி பணியாற்றும் அந்த மாவட்டத்திலேயே அதிகாரி புகார் கொடுத்து, வழக்குப்பதிவு செய்ய வேண்டும். பின்னர், வேறு பிரிவுக்கு மாற்றலாம். ஆனால் இந்த விவகாரத்தில், சீரியஸ் தண்டனை கொடுக்க வேண்டும்’’. அவரை விசாரிக்காமலேயே தூக்கிலிட வேண்டும் என்றார். மற்றொரு அதிகாரியோ, லஞ்ச ஒழிப்புத்துறையில் பெண் அதிகாரி புகார் கொடுத்தவுடன் நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்காது. முருகனுக்கு பாதுகாப்பு கொடுத்ததால்தான், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கின்றன’’ என்றார்.

மற்றொரு பெண் அதிகாரி கூறும்போது, ‘பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு மட்டுமல்ல, காவலர்கள் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை உள்ள அதிகாரிக்கும் பிரச்னைகள் உள்ளன. இதனால் இந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பதன் மூலம், கீழ் மட்டத்தில் உள்ள பெண்களை பாதுகாக்க முடியும். யாரும் இதுபோன்ற அதிகாரிக்கு உதவி செய்யக்கூடாது. இந்த பெண் அதிகாரியை தன் மகள்போல உயர் அதிகாரி பார்க்க வேண்டும்’’ என்றார். எல்லோரும் கடுமையாக கண்டித்து எழுதியபோது ஒரே ஒரு ஐபிஎஸ் அதிகாரி மட்டும் ராஜேஷ்தாசுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறும்போது, ‘‘சோஷியல் மீடியாவில் மொத்தமாக டேமேஜ் பண்ணுகிறார்கள். நாம் உயர் அதிகாரிகள். நாம் கோபப்படக்கூடாது. உண்மையை விசாரிக்கணும். உணர்ச்சிவசப்படக் கூடாது. நீங்களே தீர்ப்பு எழுதிவிட்டீர்கள்’’ என்று கூறியுள்ளார். அப்போது டெல்லியில் பணியாற்றிய அதிகாரி ஒருவர், இந்த சம்பவத்தால் தமிழக போலீஸ் என்று டெல்லியில் சொல்வதற்கே கஷ்டமாக உள்ளது. நம்மைப் பற்றி தவறாக நினைக்கிறார்கள். இதனால் இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளளார்.

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள சட்டம் ஒழுங்கு டிஜிபி  ராஜேஷ் தாஸின் மனைவி பீலா ராஜேஷ், கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் தமிழக சுகாதாரத் துறை செயலாளராக பதவி வகித்தவர். அவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஒரு புகார் அளிக்கப்பட்டு, தற்போது அது நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-பாரூக்.

Comments