ஸ்டாலின் முதல்வராக 43.1% ஆதரவு! திமுக கூட்டணிக்கு 177 இடங்கள்! டைம்ஸ் நவ் - சி வோட்டர் கருத்துக்கணிப்பு!

 

-MMH

        மிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி சமீபத்தில் டைம்ஸ் நவ் - சி வோட்டர், மார்ச் 17-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை 8,709 நபர்களிடம் கருத்துக்கணிப்பு மேற்கொண்டது. அந்த முடிவுகள் வெளியாகின. இதில், திமுக கூட்டணி 177 இடங்களில் வெற்றிபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணி 44 இடங்களிலும், அமமுக 3 தொகுதிகளிலும் வெற்றிபெற வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் மற்ற கட்சிகளுக்கு இரண்டு தொகுதிகளில் வெற்றிபெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 98 இடங்களில் வெற்றிபெற்றிருந்த நிலையில், இம்முறை அது 79 இடங்கள் அதிகரித்து, மொத்தம் 177 இடங்களில் வெற்றிபெறும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல, கடந்த தேர்தலில் அதிமுக 136 இடங்கள் வெற்றிபெற்றிருந்த நிலையில் அக்கட்சி இம்முறை, 87 இடங்கள் குறைந்து வெறும் 49 இடங்களை மட்டுமே கைப்பற்றும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறந்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு திமுக தலைவர் ஸ்டாலினை 43.1 சதவிகிதத்தினரும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை 29.7 சதவிகிதத்தினரும், வி.கே.சசிகலாவை 8.4 சதவிகிதத்தினரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசனை 4.8 சதவிகிதத்தினரும், நடிகர் ரஜினிகாந்த்தை 1.9 சதவிகிதத்தினரும், ஓ.பன்னீர்செல்வத்தை 1.7 சதவிகிதத்தினரும், பா.ம.க-வைச் சேர்ந்த ராமதாஸை 1.4 சதவிகிதத்தினரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கே.எஸ்.அழகிரியை 1.1 சதவிகிதத்தினரும் தேர்வுசெய்துள்ளனர்.

பாஜக தலைமையிலான தற்போதைய மத்திய அரசு குறித்து நீங்கள் எவ்வளவு திருப்தி அடைகிறீர்கள்?’ என்ற கேள்விக்கு. 13.45 சதவிகிதத்தினர் மிகவும் திருப்தி எனவும். 27.82 சதவிகிதத்தினர் ஓரளவுக்குத் திருப்தி எனவும், திருப்தி இல்லை என்று 50.38 சதவிகிதத்தினரும், தெரியாது/கருத்து சொல்ல முடியாது என்று 8.35 சதவிகிதத்தினரும் கூறியுள்ளார்கள். கொங்கு மண்டலப் பகுதிகளில் யார் வெற்றிபெறுவர் என்ற கேள்விக்கு, மொத்தமுள்ள 52 தொகுதிகளில்

12 தொகுதிகளில் அதிமுக கூட்டணியிலும், திமுக கூட்டணி 38 இடங்களிலும், மற்ற கட்சிகள் இரண்டு இடங்களிலும் வெற்றிபெறும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள வடக்குப் பகுதிகளில். 32.9 சதவிகிதத்தினர் அதிமுக கூட்டணிக்கும், 48.1 சதவிகிதத்தினர் திமுக கூட்டணிக்கும், அமமுக கூட்டணிக்கு 2.9 சதவிகிதத்தினரும், மற்ற கட்சியினருக்கு 16.1 சதவிகிதத்தினரும் வாக்களிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்திலுள்ள தெற்குத் தொகுதிகளில், 13 தொகுதிகளில் அதிமுக கூட்டணியும் , 42 தொகுதியில் திமுக கூட்டணியும் , அமமுக கூட்டணி 1 தொகுதியிலும், மற்ற கட்சியினருக்கு 2 தொகுதியிலும் வெற்றிபெற வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

'இந்தத் தேர்தலில் திமுக கூட்டணியிலுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளை ஒதுக்கியது பயனளிக்குமா?’ என்ற கேள்விக்கு. ஆம் என்று 45.1 சதவிகிதத்தினரும், இல்லை என்று 30.8 சதவிகிதத்தினரும், சொல்ல முடியாது என்று 24.1 சதவிகிதத்தினரும் பதிலளித்துள்ளனர்.

தமிழகத்தில் பா.ஜ.க-வின் இந்துத்துவா அரசியல் எடுபடுமா?’ என்ற கேள்விக்கு, 45 சதவிகிதத்தினர் எடுபடாது என்றும், 31 சதவிகிதத்தினர் எடுபடும் என்றும், பதிலளிக்க முடியாது என்று 22 சதவிகிதத்தினரும் தெரிவித்துள்ளார்கள். அதேபோல, தி.மு.கவின் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமா என்ற கேள்விக்கு 41 சதவிகிதத்தினர் ஆம் என்றும், இல்லை என்று 42 சதவிகிதத்தினரும் தெரிவித்துள்ளனர். அதேபோல நடைபெறவுள்ள புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கூட்டணி 16 இடங்களிலும், பாஜக கூட்டணி 4 இடங்களிலும் வெற்றிபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

-பாரூக்.

Comments