இன்னும் 48 நாட்களில் உதிக்கும் சூரியன்! திமுகவின் கவுண்ட் டவுன் கடிகாரம்!!
தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளன. இதையடுத்து வேட்புமனு தாக்கல் மற்றும் தேர்தல் பிரச்சாரம் களைகட்டி வருகிறது. அந்த வகையில் கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில் திமுகவின் வேட்பாளர்கள் பட்டியலை முதல் கதாநாயகன் என்றும், தேர்தல் அறிக்கையை இரண்டாவது கதாநாயகன் என்றும் பொதுமக்களிடையே புகழாரம் சூட்டப்பட்டுள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள பல்வேறு அம்சங்கள் தமிழக மக்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளன.
இதன் தொடர்ச்சியாக தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில் திமுக கூட்டணிக்கு சாதகமான முடிவுகள் காணப்படுகின்றன.
ஏபிபி நியூஸ் - சி வோட்டர் கருத்துக்கணிப்பில் திமுக கூட்டணிக்கு 158 முதல் 166 சட்டமன்ற தொகுதிகள் கிடைக்குமெனவும் அதிமுக கூட்டணிக்கு 60 முதல் 68 தொகுதிகள் கிடைக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டைம்ஸ் நவ் - சி வோட்டர் கருத்துக்கணிப்பில் திமுக கூட்டணிக்கு 158 தொகுதிகளும், அதிமுக கூட்டணிக்கு 65 தொகுதிகளும் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.
இந்நிலையில் தேர்தல் முடிவு மற்றும் திமுக ஆட்சியமைக்கப் போகும் நேரத்தை குறிக்கும் வகையில் அண்ணா அறிவாலயத்தில் கடிகாரம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடிகாரத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2ஆம் தேதிக்கு மீதமுள்ள நேரத்தை நாள், நேரம், நிமிடங்கள் என குறைந்து கொண்டே செல்லும் வகையில் செட்டிங் செய்யப்பட்டிருக்கிறது. இதில் 00.00.00.00 என வரும் போது தமிழகத்தின் இருண்ட காலம் முடிவுக்கு வந்து விடியல் பிறக்கும் என்பதை குறிக்கும் வகையில் "உதிக்கும் சூரியன்" என்று பெயரிடப்பட்டுள்ளது.
- பாரூக்.
Comments