தமிழகம் முழுவதும் 55 டி.எஸ்.பி. மற்றும் ஏ.எஸ்.பி.க்கள் இடமாற்றம்! டிஜிபி திரிபாதி அதிரடி உத்தரவு!!
தமிழகம் முழுவதும் 55 டி.எஸ்.பி. மற்றும் ஏ.எஸ்.பி.க்களை இடமாற்றம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வருகிற 6-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.
இதற்கிடையே, சட்டமன்ற தேர்தலில் பணப்பட்டு வாடா நடைபெறாமல் இருக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் இன்று வரை ரூ.135 கோடிகளுக்கு மேலான பணம், நகை, பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், தேர்தல் ஆணைய பரிந்துரையை ஏற்று காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் உதவி ஆணையர்கள் என தமிழகம் முழுவதும் 55 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். சென்னையில் மட்டும் 33 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை, தி.மலை, சேலம் மற்றும் சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் உட்பட மற்ற மாவட்டங்களின் உதவி ஆணையர்களை இடமாற்றம் செய்து டிஎஸ்பி உத்தரவிட்டுள்ளார். கடந்த 2 தினங்களுக்கு முன்பு 277 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து திரிபாதி உத்தரவிட்டிருந்தார். முன்னதாக, உதவி ஆணையர்கள், டி.எஸ்.பி.க்கள் 9 உயரதிகாரிகளை தேர்தல் அல்லாத பணிக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். நேற்று தேர்தல் நடத்தை விதிமீறல்களில் ஈடுபடுவதாக கோவை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ராஜாமணி மற்றும் கோவை மாநகர காவல் ஆணையர் சுமத் ஆகியோர் பணியிடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
-Ln.இந்திராதேவி முருகேசன், சோலை. ஜெய்க்குமார்.
Comments