உஷார்... இந்த 7 மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா தொற்று?
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை, மெல்ல மெல்லத் தொடங்கி வருகிறது. ஒரு நாளில் தொற்று உறுதியாபவர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. பல வாரங்களாக 500-க்கும் கீழ் ஒரு நாளின் தொற்றாளர்கள் எண்ணிக்கை இருந்து வந்த நிலையில், தற்போது 650க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது.
அதிலும் குறிப்பாக ஏழு மாவட்டங்களில் பாதிப்பு வேகமாக அதிகரிப்பதாக சுகாதாரத்துறை கண்டறிந்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருவள்ளூர், தஞ்சாவூர், காஞ்சிபுரம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.
குறிப்பாக சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. சென்னையில் பிப்ரவரி 25ம் தேதி முதல் மார்ச் 3ம் தேதி வரை 1,239 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 33% பாதிப்பு அதிகமாகி 1648 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அதே போன்று காஞ்சிபுரம் மாவட்டத்த கடந்த இரண்டு வாரங்கள் முன் 119 ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரத்தில் 34% அதிகரித்து 160 ஆக உயர்ந்துள்ளது. கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் 26.1%, திருப்பூரில் 31.7% அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக தொற்று உறுதியாகும் விகிதமும் ( 100 பேர் பரிசோதனை செய்தால் எத்தனை பேருக்கு தொற்று) அதிகரித்துள்ளது. சென்னையில் பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் 1.4% என இருந்தது தற்போது 2% ஆக உயர்ந்துள்ளது. அதே போல் கோவையில் 1.5% லிருந்து 2.1% ஆக உயர்ந்துள்ளது. செங்கல்பட்டில் 1.4% முதல் 1.8% ஆக தற்போது உயர்ந்துள்ளது.
'பிப்ரவரி மாதம் நடைபெற்ற அதிக எண்ணிக்கையிலான குடும்ப நிகழ்வுகளே இதற்குக் காரணம்' என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவிக்கிறார். மேலும், 'மகாராஷ்ட்ரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க குடும்ப நிகழ்வுகளும், கிராம பஞ்சாயத்து தேர்தல் வெற்றி ஊர்வலங்களுமே காரணம்.
அது போன்ற நிலை தமிழ்நாட்டில் ஏற்படாமல் இருக்க அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். தேர்தல் பொதுக்கூட்டங்கள் நடத்த பரந்த இடங்களைத்தான் மாவட்ட நிர்வாகம் தேர்வு செய்து தருகிறது. அந்த இடங்களில் மட்டுமே பிரச்சார பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டும். தொண்டர்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து வருவதை அரசியல் கட்சிகள் உறுதிப்படுத்த வேண்டும்' எனவும் அவர் தெரிவித்தார்.
மீண்டும் ஊரடங்கு வருமா? `பொதுமக்கள் முன்பு இருந்ததுபோலவே முகக் கவசம் அணிந்து, சரியான சமூக இடைவெளிகளைப் பின்பற்றுதல் போன்ற கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால், தற்போது மகாராஷ்டிராவில் ஏற்பட்டிருக்கும் நிலைதான் தமிழகத்துக்கும் ஏற்படும். முன்புபோல மக்கள் இப்போது முகக் கவசம் அணிவது இல்லை. கொரோனா தொற்று முழுமையாக நீங்கும்வரை மக்கள் பாதுகாப்போடு இருக்க வேண்டும். சிறிய அலட்சியமும் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும்' என்றும் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.
-பாரூக்.
Comments