குன்றில் விளக்காய் குறள்! வியக்க வைக்கும் வாழ்நாள் சாதனை!

     -MMH

ஒரு மலையில் திருக்குறள் கல்வெட்டுக்களைச்  செதுக்கி உலகம் வியக்கும் அழியாப்  புகழை  திருக்குறளுக்கும் திருவள்ளுவருக்கும் சேர்க்க அல்லும்பகலும் உழைக்கும்  உன்னத மனிதர் திரு. குறள்மலை இரவிக்குமார்..!

இவர் 1330 திருக்குறளையும் தமிழ் மற்றும் ஆங்கில விளக்கத்துடன், கல்வெட்டாக ஒரு மலையில் பதிக்க "குறள் மலைச் சங்கம்" என்ற அமைப்பை 1999ஆம் ஆண்டு தொடங்கினார்..!

கடுமையான சூழ்நிலைகளில் பல்வேறு மலைகளையும் பாறைகளையும் ஆய்வு செய்து, இறுதியாக தமிழ்நாடு அரசு சுரங்கத்துறை, தொல்லியல் துறை ஆதரவுடன், ஈரோடு மாவட்டம் மலையப்பாளையம் என்ற இடத்தில் உள்ள மலையைத் தேர்வு செய்தார்..!

குன்றின் உச்சியில் தமிழ் கடவுளாம் முருகனின் கோவில் இருப்பது ஒரு சிறப்பு.

அங்கு முதற்குறளைப்  பதித்து, இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ஆர் மகாதேவன், சிற்பி பாலசுப்பிரமணியம், கவாலியர் எம் எஸ் மதிவாணன் ஆகியோரை வைத்து  திறப்பு விழா செய்துள்ளார், திரு. குறள்மலை இரவிக்குமார் அவர்கள்.

இதற்காக சுமார் 20 ஆண்டுகளாக இவர் முயற்சி எடுத்து ஓய்வின்றி உழைத்து வருகிறார். தன் வாழ்நாளில் பெரும் பகுதியையும், தன் வாழ்நாள் சேமிப்பையும் இதற்காகவே செலவிட்டுள்ளார்.

இனி வரும் பலநூறு தமிழ்த் தலைமுறைகளுக்கும் சொத்து சேர்த்துக் கொண்டு இருப்பதாக கூறும் இவர், தற்போது மட்டும் அல்ல இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும் தமிழர்களின் அசையாச் சொத்து தான் இந்த திருக்குறள் கல்வெட்டுகள் என்று அர்ப்பணிப்போடு சொல்கிறார்.!

தமிழ் உணர்வு கொண்ட நாம் அனைவரும் இந்த திருக்குறள் கல்வெட்டு திட்டம் நிறைவேறுவதற்கு குறள் மலைச் சங்க நிறுவனர் குறள்மலை இரவிக்குமார் அவர்களுக்கு துணை நிற்போம்..!

வான் புகழ் வள்ளுவனின் குறள் மலையை அமைக்க உதவுமாறு  மத்திய,  மாநில அரசுகளை வலியுறுத்துவோம்..!

என்றும் திருக்குறட் பணியில்,

Ln.இந்திராதேவி முருகேசன்,ஜெய்க்குமார்.

Comments