திருடப்போன இடத்தில் கள்ளக்காதல்! கொடிகட்டிப் பறந்த திருட்டுத் தொழில்!! கொத்தா சிக்கிய கும்பல்!!

     -MMH

     10 பேரை வேலைக்கு வைத்து, திருட்டு பிழைப்பு நடத்தும் கள்ளக்காதல் ஜோடி போலீசாரிடம் சிக்கியுள்ளது. அவர்களிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கோவையில் சேலை வாங்குவதுபோல நடித்து 3 பெண்கள் உள்பட 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று விலை உயர்ந்த பட்டுச் சேலைகளை திருடிச்சென்றது. அவர்கள் திருடிய காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து கடை உரிமையாளர் மோகன்ராஜ், போலீஸ் துணை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்ததன் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு, பட்டுச் சேலைகளை திருடிய கும்பல் குறித்து விசாரணை நடைபெற்றது.

அங்கு கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை போலீசார் சோதனை செய்தபோது, அவர்கள் ஏற்கனவே காந்திபுரத்தில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் திருடி கைதாகி ஜாமீனில் வெளியே வந்தவர்கள் என்பதும், கோர்ட்டில் ஆஜராகாமல் கோவையில் பல்வேறு ஜவுளிக்கடைகளில் கைவரிசை காட்டி வந்துள்ளதும் தெரியவந்தது.

இதனையடுத்து, தேனி மாவட்டம் கம்பத்தில் பதுங்கி இருந்த முருகன், மணிவாசகம், தனலட்சுமி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து, கோவைக்கு கொண்டு வந்தனர். தேனி மாவட்டத்தை சேர்ந்த அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

இந்த கும்பலுக்கு தலைவர்களாக செயல்பட்டவர்கள் முருகன் மற்றும் அவருடைய நண்பர் லட்சன் ஆவர். இவர்கள் சேலைகளை திருடுவதற்காகவே 10 பேரை வேலைக்கு வைத்திருந்தனர். தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கு சென்று ஜவுளிக்கடைகளில் சேலைகள் வாங்குவது போல நடித்து, திருடி வந்துள்ளனர்.

இந்நிலையில் திடீரென லட்சன் இறந்துவிட்டார். இதனையடுத்து லட்சனின் மனைவி தனலட்சுமிக்கும், முருகனுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டு உள்ளது. லட்சனுக்கு பதிலாக தனலட்சுமியை கூட்டாளியாக வைத்துக்கொண்டார்.

இந்த கள்ளக்காதல் ஜோடி தலைமையில் பட்டு சேலை திருட்டு தொழில் கொடிகட்டி பறந்துள்ளது. பெரிய ஜவுளிக்கடைகளுக்கு தம்பதி போல செல்லும் இவர்கள் ₹.5,000 முதல் ₹.10,000 வரை மதிப்புள்ள பட்டுச் சேலைகளின் பக்கம்கூட திரும்பிப் பார்ப்பதில்லை.

₹.25,000 முதல் ₹.50,000 வரை உள்ள விலை உயர்ந்த பட்டுச் சேலைகள் தான் இவர்களின் குறி. இவர்கள் ஒரு கடையைத் தேர்ந்தெடுத்த பின்னர் அதிகாலையிலேயே அந்த பகுதிக்கு காரில் சென்று விடுவார்கள். கடை திறந்த உடனே கடைக்கு சென்று உயர் ரக பட்டு சேலை வாங்குவதுபோல நடித்து பட்டு சேலைகளை திருடிவிடுவார்கள்.

அவர்களின் சொந்த ஊரான கம்பத்தில் முருகன், தனலட்சுமி ஆகியோர் குறித்து பொதுமக்களிடம் கேட்டபோது ‘கல்யாணத்துக்கு சேலைகளை விற்பனை செய்பவர்கள் வீடுதானே. அதோ அங்கு உள்ளது’ என்று கூறியது போலீசாரையே அதிர்ச்சியடைய செய்தது. கடைகளில் சேலைகளை திருடிய பின்பு, 10 நாட்கள் போலீசார் தங்களை தேடுகிறார்களா? என்று காத்திருப்பார்கள். கண்டுபிடிக்கவில்லை என்றால் 11-வது நாளில் மிகப்பெரிய பார்ட்டி வைத்து கும்மாளம் அடிப்பார்களாம்.

அப்படித்தான் 11-வது நாளில் கம்பத்தில் உள்ள அவர்களின் வீட்டுக்குள் போலீசார் அதிரடியாக நுழைந்தனர். அப்போது வீட்டுக்குள் பார்ட்டி நடந்து கொண்டிருந்தது. போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்று, வசமாக மாட்டிக்கொண்டதை உணர்ந்ததையடுத்து அவர்கள் போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்தனர்.

அந்த வீட்டில் போலீசார் சோதனையிட்டபோது, அங்கு ஒரு ஜவுளிக்கடலே இருந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பட்டுச் சேலைகளின் மதிப்பு ₹.1 கோடி இருக்கலாம் என்று போலீசார் கூறினர். இவர்களது வீட்டில் திருமண பட்டு சேலை வாங்க எப்போதுமே சுற்றுப்புற மக்கள் குவிந்து இருப்பார்கள்.

₹.25 ஆயிரம் மதிப்புள்ள சேலைகள்

₹.5,000, ₹.30,000 மதிப்புள்ள சேலைகள் 

₹.7,000, ₹.50,000 மதிப்புள்ள சேலைகள் 

₹.10,000 என்று விற்றுவந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.

- அப்துல் சலாம்.

Comments